ஒரு சில நாட்களுக்கு முன்னர் எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகனிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. தீபச்செல்வனிடம் ஒரு விடயம் சம்பந்தமாகப் பேசினேன். ஏதும் சொன்னாரா? என்றார். விசாரித்தபோது தனது உறவினர்குடும்பம் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறார்கள் போரில் பாதிக்கப்பட்ட பிள்ளை ஒன்றுக்கு படிப்புக்காக தொடர் உதவி செய்வதாகவும் அவர்கள் சில நாட்களில் புறப்பட இருப்பதால் தொடர்பினை ஏற்படுத்தித் தருமாறும் கேட்டுக் கொண்டார்.
தீபச்செல்வனின் 'தமிழ்ச்செல்வியின் யாருமற்ற நிலம்' என்றொரு கவிதை வந்தது எல்லோரும் அறிவர். அந்தச் சிறுமிக்கு உதவுவதற்காகவே தீபச்செல்வன் அந்த ஏற்பாட்டைச் செய்திருந்தார்.
கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்று புலமைப்பரிசில் பரீட்சை எடுக்கவிருக்கும் மாணவியே தமிழ்ச்செல்வி என்பதும், அவளின் தாய் தந்தை சகோதரன் ஆகியோர் போரில் உயிரிழந்து விட்ட நிலையில் இன்னொரு இயங்கமுடியாத சகோதரனுடன் கூட தனது பெரிய தாயுடன் வாழ்கிறாள் என்பது அறிய முடிந்தது.
அதன்பின்னர் தொடர்பு கொண்டாயிற்று.
அதிபர் அலுவலகத்தில் உரையாடுதல்
அவளுக்கு உதவ முன்வந்தவர்கள் லண்டனில் இருந்து வந்திருந்த மயூரன் சுஜா தம்பதியினர். கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலய அதிபர் திருமதி ஜெயா மாணிக்கவாசகம் ஊடாக குறிப்பிட்ட சிறுமியைச் சந்தித்தனர். அதிபர் அவர்களுடன் உரையாடிய அந்தத் தம்பதியினரின் மனநிலையையும் மனநிறைவோடு உதவ வந்திருந்த ஆர்வத்தையும் என்னால் புரிந்துகொள்ளமுடிந்தது.
தமிழ்ச்செல்வின் தொடர்கல்வி சார்ந்த செலவுகளுக்கு ஒரு தொகைப் பணம் பாடசாலை அதிபர் ஊடாக சேர்வதற்கு ஒர் ஒழுங்கு செய்யப்பட்டது.
அடுத்து இன்னுமொரு சந்தோசம்.
இன்னொரு குழந்தைக்கு உதவுவது தொடர்பான ஏற்பாட்டின் பின்னர்
(மயூரன் சுஜா குடும்பத்தினருடன் அதிபர், திருதிருமதி குப்பிளான் சண்முகன் ஆகியோருடன்)
தற்போது இன்னுமொரு சிறிய வயதில் உள்ள எந்த உறவுமில்லாத இன்னொரு பிள்ளைக்கும் தொடர்ச்சியாக அவளின் படிப்பு உள்ளிட்ட செலவுகளை தாம் பொறுப்பேற்கவும் முன்வந்துள்ளனர். இரண்டு பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தம்மால் முடிந்தவரை உதவ முடிவும் செய்துள்ளனர்.
இலக்கிய உறவாலும் நட்பாலும் இப்படியெல்லாம் சாதிக்க முடியுமாயின் ஏனையவர்களால் ஏன் முடியாது என்ற ஒரு கேள்வியும் என்னுள் முட்டிக் கொண்டிருந்தது. ஆகக்குறைந்தது எங்கள் பிள்ளைகள், எங்கள் சமூகம் என்று கத்திக் கொண்டிருப்பவர்கள் எந்தவழியிலாவது உதவுவதற்கு முதற்படியை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.
இலக்கிய உறவாலும் நட்பாலும் இப்படியெல்லாம் சாதிக்க முடியுமாயின் ஏனையவர்களால் ஏன் முடியாது என்ற ஒரு கேள்வியும் என்னுள் முட்டிக் கொண்டிருந்தது. ஆகக்குறைந்தது எங்கள் பிள்ளைகள், எங்கள் சமூகம் என்று கத்திக் கொண்டிருப்பவர்கள் எந்தவழியிலாவது உதவுவதற்கு முதற்படியை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.
ஆகக்குறைத்தது ஒரு படைப்பினூடாகச் சுட்டிக் காட்டுதவனூடாக என்றாலும்.
ஒன்று மட்டும் புரிகிறது. தமிழ்ச்செல்விபோல இன்னும் நிரம்ப குழந்தைகளும் இருக்கிறார்கள். ஒரு மயூரன் சுஜா போல இன்னும் நிரம்ப மனிதர்களும் இருக்கிறார்கள். யார் முதலில் வாய்திறக்கிறார்கள் என்பதில்தான் பிரச்சினை.
பதிவு- சு.குணேஸ்வரன்(துவாரகன்)