ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல்



நூல் அறிமுகம் - சு.குணேஸ்வரன்

கலாநிதி ஆ.கந்தையா ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார். இலங்கையில் இருந்தபோது கல்வி மற்றும் நிர்வாகம் சார்ந்த பல பதவிகளை வகித்தவர். தமிழ்மொழி, சமயம், சிறுவர் இலக்கியம், கவிதை, நாவல், கட்டுரை, ஆய்வு என பல துறைகளில் பங்களிப்புச் செய்திருக்கிறார். தமிழிலும் ஆங்கிலத்திலும் இதுவரை 45 நூல்கள் எழுதியிருக்கிறார். இவற்றுள் ஆஸ்திரேலியா சார்ந்து மட்டும் எழுதிய பத்துக்கு மேற்பட்ட நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன.
இந்த வகையில் 1998 இல் வெளிவந்த ‘ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல்’ என்ற நூல் பற்றிய அறிமுகமாக இக்குறிப்பு அமைகின்றது. இதில் மூன்று ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன.

1. ஆஸ்திரேலியாவில் தமிழர்களும் தமிழ் மொழியும்
2. ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல்
3. ஆஸ்திரேலியாவில் தமிழ்ப் பிள்ளைகளைத் தமிழ் பேசுவோராக உருவாக்கச் சிலஆலோசனைகள்

இந்தக் கட்டுரைகளில் பேசப்படும் விடயம் ஒன்றுதான். இருந்தாலும் படிப்படியாக தகவல்களில் கருத்துக்களில் முடிவுகளில் வளர்ச்சியைக் காணமுடிகின்றது. இந்நூலில் அவர் தந்துள்ள அறிமுகத்தின் ஊடாக இக்கட்டுரைகள் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காம் உலகத் தமிழாசிரியர் மாநாட்டுக்காக எழுதப்பட்டவை என்பது தெரியவருகிறது.

முக்கியமாக இன்று புலம்பெயர்ந்த நாட்டு பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்கும்போது தமிழ்மொழியும் பண்பாடும் முக்கிய பேசுபொருள்களாக உள்ளன.

தமிழ்மொழியைப் புலம்பெயர்ந்த தமிழர்களில் எத்தனை வீதமானோர் வீட்டுமொழியாகப் பேசுகின்றனர். தமிழ் கற்பித்தலில் நிறுவனங்கள் தனிநபர்களின் முயற்சிகள், பாடத்திட்டம், நூலகங்களில் தமிழ் நூல்கள், தமிழ்மொழியை பரவலாக்குவதில் ஊடகங்களின் பங்கு ஆகியன பற்றியெல்லாம் இந்நூலில் குறிப்பிடுகிறார்.

அவுஸ்திரேலியாவில் உள்ள 8 மாநிலங்களிலும் வாழ்கின்ற தமிழர்களின் 1996 வரையிலான குடித்தொகை மதிப்பீடுகளை ஆதாரமாகக் கொண்டு அவுஸ்திரேலியாவில் தமிழை வீட்டுமொழியாகப் பேசுவோர் பற்றிய கருத்துக்களை முன்வைத்துள்ளார். இந்நூல் வெளிவந்து பத்துவருடம் கடந்துவிட்ட நிலையில் இதில் இன்னமும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே அவை பற்றியும் எழுதவேண்டிய தேவையை இந்நூல் வலியுறுத்துகின்றது.

ஆனால் இக்கட்டுரைகளில் அவர் தனது ஆய்வு முடிவுகளாக முன்வைத்துள்ள கருத்துக்கள் மிக முக்கியமாக அமைந்துள்ளன. அவை இன்றும்கூட பொருந்தக் கூடியனவாகவே உள்ளன.

இந்நூலின் இறுதிக் கட்டுரையில் உள்ள ‘தமிழ்ப்பிள்ளைகளும் தமிழ் மொழியும்’ என்ற உபபிரிவில் அவர் குறிப்பிடுபவற்றைக் கவனத்திற் கொள்ளவேண்டும்.

1. ஆங்கிலம் தெரியாத பெற்றோர்களின் பிள்ளைகள் தமிழிலே பேசக்கூடியவர்களாக இருக்கின்றனர். அப்பிள்ளைகளின் ஆங்கில அறிவும் ஆற்றலும் ஏனைய பிள்ளைகளிலும் எவ்வகையிலும் குறைவானவை என்று கூறமுடியாது.
2. ஆங்கிலம் தெரிந்த பெற்றோர்களுள் பெரும்பாலானோரின் பிள்ளைகள் தமிழைப் பேச முடியாதவர்களாகக் காணப்படுகின்றனர். ஏனெனில் ஆங்கிலம் தெரிந்த பெற்றோர்களுள் பெரும்பாலானோர் வீட்டில் பிள்ளைகளுடன் ஆங்கிலத்திலேயே உரையாடுகின்றனர்.
3. பாட்டன் பாட்டியுடன் வாழும் பேரப்பிள்ளைகள் தமிழில் பேசக்கூடியவர்களாக இருக்கின்றனர். ஏனெனில் பேரப்பிள்ளைகளுடன் பாட்டனும் பாட்டியும் ஆங்கிலம் தெரிந்தாலும் தமிழிலேயே பேசுகின்றனர்.

இதனூடாக நூலாசிரியர் கண்டுகொண்டமை வீட்டுமொழியாக புலம்பெயர்ந்தவர்கள் தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்பதே. தமிழைப் பேசுவது முதற்கட்டமாக வெற்றிபெறும்போதுதான் அடுத்த நிலையில் தமிழை எழுத வாசிக்கக்கூடிய படிநிலைக்கு கொண்டு செல்ல முடியும். இல்லாவிட்டால் தனியே தமிழைப் பேசிக்கொண்டு அடுத்த தலைமுறையிலாவது நாங்கள் தமிழர் என்ற அடையாளத்தை என்றாலும் தாங்கி நிற்பர் என்கிறார்.

தமிழ் செம்மொழியாக உயர்ந்து நிற்கின்ற இவ்வேளையிலே எங்களின் தலைமுறைகள் தமிழைப் பேசமுடியாதவர்களாக நிற்கின்ற அவலநிலையை கொஞ்சமாவது போக்குவதற்கு இன்றைய தலைமுறையில் வாழ்பவர்கள் பொறுப்பான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை இந்நூல் வலியுறுத்துகின்றது.

நூல் - ஆஸ்திரேலியாவில் தமிழ் மொழி கற்பித்தல்
ஆசிரியர் - கலாநிதி ஆ.கந்தையா
வெளியீடு - நான்காவது உலகத் தமிழாசிரியர் மாநாடு,
சென்னை.
3-5 டிசெம்பர் 1998.
பக்கம் - 48

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக