ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

வரலாற்றின் சுவடுகளில் இருந்து - தொண்டைமானாறு




- சு. குணேஸ்வரன்

   தொண்டைமானாறு என்றதும் எமக்கு உடன் நினைவுக்கு வருவது செல்வச்சந்நிதி முருகன் ஆலயமும் ஆலயத்தின் அருகே ஓடிக்கொண்டிருக்கும் ஆறும்தான். இப்பிரதேசத்தின் வரலாற்றையும் அதன் தொன்மைச் சிறப்புக்களையும் நினைவுபடுத்தும் எச்சங்களில் போரின் பாதிப்புக்களால் அழிந்தவைபோக மீதமானவை இன்றும் தம் மேன்மையை, தொன்மையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

   வரலாறுகள் என்பவை எங்கள் தலைமுறைகள் வாழ்ந்த வாழ்க்கையை, அவர்கள் தாண்டிய தடைகளை எமக்கு நினைவூட்டிக் கொண்டிருப்பவை. அதனைத்தாண்டியும் மேலும் நாம் கடந்துசெல்லவேண்டிய பாதையைக் காட்டுபவை. அந்த வரலாற்று எச்சங்கள் இருந்த அடையாளம் தெரியாமல் அழிக்கப்படும்போது அல்லது மறைக்கப்படும்போது எங்கள் மூதாதையர் கடந்துவந்த பாதைகளும் எமது நினைவிலிருந்து அழிக்கப்படுகின்றன. அவை அழிக்கப்பட்டால் மீளவும் பூச்சியத்தில் இருந்தே தொடங்கவேண்டும் என்ற நினைவை ஊட்டுவனவாகவோ அல்லது எமது வாழ்வுக்கு அந்நியமான புதிய அடையாளத்தைத் திணிப்பவையாகவோ அமைய வாய்ப்புண்டு. அந்த நிலை இன்றைய உலகமயமாக்கலில் மிக வேகமாக வேரூன்றியும் வருகின்றது.

    மேற்குலக நாடுகள் இன்றுங்கூட தமது தொன்மையை, தமது வரலாற்றுச் சுவடுகளைப் பாதுகாத்து வருகின்றன. சில இனத்தவர் தங்கள் வேர்களைத் தேடிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

   இந்த வகையில் வடமராட்சிப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில் தொண்டைமானாற்றில் சில எச்சங்களை மீட்டுப்பார்க்க முயலலாம். செல்வச்சந்திதி ஆலயம், அருகே ஓடிக்கொண்டிருக்கும் ஆறு, நன்னீர் நீரணை, பழையபாலம், முகத்துவாரம், உப்புமால், அக்கரை, கோணேசர் ஆலயம், அதன் அருகில் அமைந்திருக்கும் குளம், வீரமாகாளி – மாகாளி அம்மன் கோவில்கள், அதன் அருகே இருக்கும் பிரமர் குளம், வற்றாத கிணறுகள், கெருடாவிலில் அமைந்திருக்கும் மண்டபம் (குகை), சின்னமண்டபம், கோட்டைகாடு ஆகியவற்றை நாங்கள் நினைத்துப்பார்ப்பதற்கு இப்பிரதேசம் இடந்தருகிறது.

வல்லியாறு
   
செல்வச்சந்நிதி ஆலயத்தின் அருகே ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றின் பூர்வீகப் பெயர் வல்லியாறு. அந்த ஆறு இப்போது இருப்பதுபோல் ஆரம்பத்தில் பெருங்கடலுடன் இணைந்திருக்கவில்லை. செல்வச்சந்நிதி ஆலயத்தின் புராணக்கதைகளின் ஊடாக ஆலயத்தின் அருகே வல்லியாறு என்ற பெயருடைய நன்னீரோடை இருந்ததென்றும் அருகே விருட்சங்கள் நிறைந்திருந்தன என்றும் வீரவாகுதேவர், ஐராவசு முனிவர் முதலியோர் இருந்து பூஜையும் தவமும் செய்ததாகவும் செல்வச்சந்நிதி ஆலய செவிவழிக்கதைகளில் சொல்லப்படுகிறது. இது சோழ இராட்சிய காலத்திலேயே ஆழமாக்கப்பட்டு கடலுடன் கலந்து தொண்டைமானாறாக மாறியது. வல்லிநதி ஓடியதால் அதன் தெற்குப்புறம் வல்லிவெளி என்று அழைக்கப்பட்டிருக்கலாம். அதுவே பின்னர் மருவி வல்லைவெளி ஆகியிருக்கலாம் எனக் கருதவும் இடமுண்டு.

தொண்டைமானாறு
     தொண்டைமானாறு என்ற இப்பிரதேசம் ஆரம்பத்தில் ‘மணலூர்’ என்ற பெயர் கொண்டே அழைக்கப்பட்டது. பின்னர் தமிழ்நாட்டு ஆட்சியாளர்களில் குறிப்பாக சோழராட்சிக் காலத்தில் இருந்தே தொண்டைமானாறு என்ற பெயர் வழங்கப்பட்டு வந்திருக்கிறது.

தொண்டைமான் என்பவனால் வெட்டப்பட்ட ஆறு என்ற அர்த்தம் பொதுவாக இன்றும் இப்பிரதேச மக்களிடையே வழங்கப்படுகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் சங்ககாலம் முதல் பல தொண்டைமான் வம்சத்தினர் வாழ்ந்துள்ளனர். இங்கு குறிப்பிடப்படும் தொண்டைமான் சோழர்காலத்தில் ஆட்சிசெய்த முதலாம் குலோத்துங்க மன்னனின் (கி.பி 1070 - 1120) பிரதம படைத்தளபதியாக இருந்த கருணாகரத் தொண்டைமான் என்பது அரசியல் வரலாற்றின் ஊடாகத் தெளிவாகின்றது.

   ஏனெனில் சோழர்கால மன்னர்களின் ஆட்சியில் ஈழப்பிரதேசம் இருந்திருக்கிறது என்பதற்கு இலக்கிய ஆதாரங்கள் உள்ளன. குலோத்துங்க சோழனின் கலிங்கப்போர் வெற்றியை சயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியில் பாடியுள்ளார். அப்போரை முன்னின்று நடாத்திய கருணாகரத்தொண்டைமானே இக்காலத்திற்குரியவன்.

   கலிங்கப்போருக்கு முன்னர் இலங்கையில் வடபிரதேசத்தைத் தமது ஆட்சிக்குட்படுத்திய சோழரின் காலத்திலேயே கருணாகரத்தொண்டைமான் இந்த ஆற்றையும் ஆழமாக்கினான். இங்கு வந்து கரணவாய், வெள்ளப்பரவை முதலான இடங்களில் தானாகவிளைந்த உப்பைச் சேகரித்து மரக்கலங்கள் மூலம் கொண்டு வந்து சேர்ப்பதற்கும், கடல்கொந்தளிப்பான காலங்களில் மரக்கலங்களைப் பாதுகாப்பதற்கும் மற்றும் கப்பல்களிலிருந்து பொருட்களை மரக்கலங்கள் மூலம் இலகுவாகத் தரைப்பகுதிக்குக் கொண்டு வந்து சேர்ப்பதற்கும் ஆற்றை ஆழமாக்கி வெட்டியுள்ளான். அதுகாலம்முதல் இப்பிரதேசம் தொண்டைமானாறு என்று அழைக்கப்படலாயிற்று.

மரப்பாலம்
   
பனைமரங்களை நாட்டி அதன்மேல் பாலைமரத் தீராந்திகள்கொண்டு கட்டப்பட்ட பழைய மரப்பாலம் அமைந்திருந்த இடம் இன்றும் அதன் எச்சமாக உள்ளது. இது 1829 ற்கும் 1867 ற்கும் இடையில் அப்போது அரச அதிபராக இருந்த ‘டைக்துரை’யால் கட்டப்பட்டது. அப்பாலத்தில் ஒரு ‘ஆயம்’ அமைக்கப்பட்டு ‘ஆயக்கட்டணம்’ வசூலிக்கப்பட்டதாகவும் அறியப்படுகிறது. பின்னர் 1954 இல் புதுப்பாலம் கட்டப்பட்டது. அது பின்னர் போர்ச்சூழலில் உடைக்கப்பட்டதன் பின்னர் தற்காலிக இரும்புப்பாலம் அமைக்கப்பட்டது. இன்று கட்டப்பட்டிருக்கும் பாலம் தொண்டைமானாற்று வரலாற்றில் 4 வது பாலமாகும். எனவே பழைய மரப்பாலம் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் அதன் கட்டட எச்சம் இன்றும் அந்த வரலாற்றை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது.

உப்புமால்
   தமிழ்நாட்டுக்கு அனுப்புவதற்காக உப்பும் உணவுப் பண்டங்களும் சேகரித்து வைக்கப்பட்ட இடம்தான் ‘உப்புமால்’ என அழைக்கப்படுகிறது. இது ஆற்றுக்கு மேற்குப்புறத்தில் அமைந்திருந்தது. இவ்விடத்தில் நாவல் மரங்களும் சவுக்குமரங்களும் நிறைந்திருந்ததாக அறியப்படுகிறது. இன்று ‘அக்கரை’ யில் சவுக்குமரங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. ‘உப்பு’ தமிழ்நாட்டு ஆட்சியாளர்களால் மட்டுமன்றி போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலத்திலும் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் மேற்குறிப்பிட்ட கரணவாய் முதலாக விளைந்திருந்த உப்பைச் சேகரித்து வண்டில்கள் மூலம் கொண்டு வந்திருக்கிறார்கள். செட்டியவூர் ஊடாக வரும் வீதி உப்புறோட் என அழைக்கப்படுவதும் இதன் காரணமாகத்தான்.

முகத்துவாரம்
   ஆனையிறவு கடனீரேயிலிருந்து வடக்கே ஓடிவரும் நீர் தொண்டைமானாற்றுக் கடலிலேயே இறுதியில் கலக்கிறது. இவ்வாறு ஆறும் பெருங்கடலும் சந்திக்கும் இடமே முகத்துவாரம் என்று அழைக்கப்படுகிறது. இவ்விடத்தின் கிழக்கும் மேற்கும் பல வரலாற்றுச் சம்பவங்களுக்குக் களமாக இருந்திருக்கின்றன.

    இன்னொரு வகையில் முகத்துவாரம் என்ற இடம் பறங்கியருடன் போரிட்ட சின்னமகாப்பிள்ளை வந்திறங்கிய இடம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது.

   மற்றும் முகத்துவாரத்துக்குக் கிழக்கு குடியிருப்புப்பிரதேசமாகும். ‘நடுத்தெரு’ மற்றும் செல்வச்சந்திக்;குச் செல்லும் தெற்குவீதியின் பகுதிகள் ஆகியன பண்டைக்காலத்தில் அரசபரம்பரையினர், படைத்தளபதிகள் இருந்த இடங்களாகும். சில காணிகளின் பெயர்கள்கூட இன்றும் அதிசயிக்கத்தக்கவகையில் உள்ளன. உதாரணமாக இராக்காவளவு, பணிக்கவளவு, சேதுபதியார்கண்டு, அத்திப்படை ஆண்டவன் கொல்லை, நயினார் கொல்லை ஆகிய பெயர்கள் இவற்றை நினைவுபடுத்துகின்றன.

கப்பல் கட்டுதல் மற்றும் கப்பற் போக்குவரத்து
   இவைதவிர சமூக பொருளாதார வாழ்வுடன் தொடர்புபட்டவை சிலவும் அறியக்கிடைக்கின்றன. ‘திரைகடலோடிய வள்ளல்’ என்ற பெயர் கொண்டு அழைக்கப்படும் வீரகத்திப்பிள்ளையின் பெயரால் விளங்கும் பாடசாலையின் நிறுவுநர் வீரகத்திப்பிள்ளையின் வரலாற்றின் ஊடாகவும் அக்காலத்து சமூக பொருளாதார நிலையினையும் அறியமுடிகிறது.

வல்வெட்டித்துறையில் இருந்து அமெரிக்காவுக்குச் சென்ற அன்னபூரணி கப்;பல் இதற்கு நல்ல உதாரணம். அதன் அயற்கிராமமாகிய தொண்டைமானாற்றில் பழைய பாலத்திற்கு அருகிலுள்ள அக்கரையில் வைத்தே ‘தெய்வநாயகி’ என்ற கப்பல் கட்டப்பட்டது. ஏனைய கப்பல்கள் காரைதீவில் கட்டப்பட்டன. சிவசுப்பிரமணியபுரவி உட்பட 6 ற்கும் மேற்பட்ட கப்பல்களை வீரகத்திப்பிள்ளை வைத்திருந்தார்.

   இன்றும் அக்கரை கடலோரத்தில் மிகுந்திருக்கும் கருங்கற்கள் மற்றும் முருகைக்கற்கள் கப்பல்களின் சீரான ஓட்டத்திற்காக கொண்டு வரப்பட்டவை எனவும் அதேபோல் இங்கிருந்து கப்பல்கள் புறப்படும்போது கெருடாவில் காட்டுக்கற்கள் ஏற்றிச் செல்லப்பட்டதாகவும் குறிப்பு உண்டு. இவற்றை ‘ஞானப்பாரம்’ என அழைப்பர். உப்பு மற்றும் உணவுப்பொருட்கள் உட்பட பல பொருட்களை ஏற்றி இறக்கும் துறைமுகங்களாக கடலோரத்தின் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, தொண்டைமானாறு, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை ஆகிய கடற்கரையோரத் துறைமுகப் பிரதேசங்கள் அக்காலத்தில் விளங்கியிருக்கின்றன. வீரகத்திப்பிள்ளையின் கப்பல்களில் பயன்படுத்திய பாரிய நங்கூரங்களில் ஒன்று வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலத்திலும் மற்றையது வல்வை ஆவணக்காப்பத்திலும் பேணப்பட்டுவருகிறது.

கோணேசர் கோவில்
   
தொண்டைமானாறு சந்தியில் அமைந்திருக்கும் கோணேசர் கோயில் மற்றும் ஆதிவைரவர் கோயில் ஆகியவற்றின் தெற்குப்புறம் இருக்கும் குளம், குளத்தின் அருகே பரந்திருக்கும் சமநிலப்பரப்பு என்பன வரலாற்றுச்சம்பவங்களுடன் தொடர்புபட்டவை. பறங்கியர் ஆட்சிக்காலத்தில் இவ்விடத்திலிருந்த பழைய கோணேசர் கோவில் இடிக்கப்பட்டு கத்தோலிக்கத் தேவாலயம் கட்டப்பட்டது என்று யாழ்ப்பாணச் சரித்திரம் கூறுகிறது.

   கோணேசர் கோயிலின் தெற்குப்பகுதி போர்த்துக்கேயரின் பெரிய சத்துருவாக இருந்த தமிழர்படையின் ‘கரையாரன் சிற்றரசன்’ போர்புரிந்த இடமென குறிக்கப்படுகிறது. இதனை 1974 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் தான் வாசித்த ஆய்வுக்கட்டுரையில் நிறுவியுள்ளதாக செ. நாகலிங்கம் எழுதியுள்ளார்.

மண்டபம் / மண்டபக்காடு
   
ஆரியச்சக்கரவர்த்திகளால் நிலவறைகளாகப் பாவிக்கப்பட்ட இடம் மண்டபக்காடு என ஒரு குறிப்பு உண்டு. கெருடாவிலில் அமைந்திருக்கும் மண்டபம் இயற்கையாகவே அமைந்த ஒரு தொல்பொருட்சின்னமாகும். இது இன்றுவரை வரலாற்று ஆய்வாளர்களினால் முறையாக ஆய்வுக்கு உட்படுத்தப்படாத பகுதியாகவே இருக்கிறது. யாழ்ப்பாண மன்னர்கால அரசியல் வரலாற்றுடன் இக்குகை தொடர்புபடுத்திப் பேசப்படுகின்ற அதேநேரம் யாழ்ப்பாண நிலவமைப்பு முறையுடனும் தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டியது. இதேபோன்ற இயற்கை அமைப்புடைய இன்னொரு மண்டபம் கடலோரத்திற்கு அருகிலிருந்த ‘சின்னமலை ஏற்றம்’ என்றழைக்கப்படும் பகுதியில் இருந்தது. போர்ச்சூழலால் அது அழிக்கப்பட்டு விட்டது.

ஏனையவை
   தொண்டைமானாற்றின் சமூக அரசியல் பொருளாதார வரலாறுகளை அறிவதற்கு இலக்கியங்களின் ஊடாகவும் ஆட்சியாளர்களின் வரலாறுகள் ஊடாகவும் சிற்சில குறிப்புக்கள் காணக்கிடைக்கின்றன.

பிற்காலத்தில் புனைவுகளிலும் தொண்டைமானாறு பற்றிய வரலாற்றுச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலின் இரண்டாம் பாகத்தில் தொண்டைமானாறு பற்றிய சில குறிப்புக்கள் காணக்கிடைக்கின்றன.

   தொண்டைமானாற்றில் அமைந்திருக்கும் வீரமாகாளி அம்மன் கோவில், நல்லூரில் அமைந்திருக்கும் வீரமாகாளி அம்மன் கோவில் என்பன ஒரே வம்சாவழித் தொடர்புள்ளவர்களினால் ஆதரிக்கப்பட்டதென அறியப்படுகிறது. தொண்டைமானாறு வீரமாகாளி அம்மன் ஆலயம் பரராஜசேகரனால் கட்டப்பட்டது. இதேபோல கெருடாவில் அமைந்துள்ள மண்டபம், மற்றும் பெரியகடற்கரைக்கு கிழக்கே கடலோரத்தில் உயரமான பகுதியில் அமைக்கப்பட்ட முக்கோணவடிவமுடைய கட்டட எச்சம் ‘கோட்டைகாடு’ என அழைக்கப்பட்டது. இவை தொண்டைமானாற்றின் முக்கியமான வரலாற்று எச்சங்களாக விளங்குகின்றன.

   இப்பிரதேசத்தில் ஊர்ப்பெயர்களில் இருந்தும் பல செய்திகளை அறியலாம். செட்டியவூர் என்ற ஊர்ப்பெயர் அக்காலத்தில் செட்டியார்கள் வாழ்;ந்ததற்கான அடையாளமாக உள்ளது. ஏனைய ஊர்ப்பெயர்கள் பிரதேசத்தின் அமைவு கொண்டு அழைக்கப்பட்டுள்ளது. மயிலியதனை, கெருடாவில், காட்டுப்புலம், நடுத்தெரு, அக்கரை, செம்பாடு என்பன சில உதாரணங்களாகும்.

   எனவே இவ்வாறான பல வரலாற்றுக் குறிப்புக்களைக் கொண்டிருக்கும் தொண்டைமானாறு போர்க்காலத்தில் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிய பிரதேசமாகும். இப்பிரதேசத்தின் தொன்மையான வரலாறுகள் பதிவு செய்யப்படவேண்டும். தொல்பொருட் சின்னங்கள் பாதுகாக்கப்படவேண்டும். வளர்ந்துவரும் சந்ததிகளுக்கு அவை கடத்தப்படவேண்டும். அப்போதுதான் அவர்கள் தம் வாழ்வையும் வளமாக்கி இப்பிரதேசத்தின் வளங்களையும் காப்பதற்கு முயல்வார்கள்.

நன்றி : உதயன்,புத்தாண்டு சிறப்பு மலர், 15.01.2015
---

வியாழன், 22 ஜனவரி, 2015

நந்தினி சேவியர் படைப்புகள்


நூல் அறிமுகம்

- சு. குணேஸ்வரன்
விடியல் பதிப்பகம் நந்தினி சேவியரின் எழுத்துக்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறது. நந்தினி சேவியர் இதுவரை எழுதிய படைப்புக்களில் சிறுகதைகள், நேர்காணல்கள், கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள், நூல்களுக்கு எழுதிய முன்னுரைகள் மற்றும் நினைவுக் குறிப்புக்கள் உள்ளடங்கலாக மிகக் காத்திரமான ஒரு தொகுப்பைத் தந்திருக்கும் விடியலுக்கு ஒரு பாராட்டு சொல்லியே ஆகவேண்டும்.

1969 முதல் 2004 வரை நந்தினி சேவியர் எழுதிய 16 சிறுகதைகளும் ‘அயற்கிராமத்தைச் சேர்ந்தவர்கள்’, ‘நெல்லிமரப் பள்ளிக்கூடம்’ ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளாக ஏற்கனவே நூலுருப் பெற்றுள்ளன. அக்கதைகள் இத்தொகுப்பில் உள்ளடங்கியுள்ளமை பிரதான அம்சமாகும்.
இதற்கு அடுத்ததாக ‘தமிழ் இனி’ மாநாட்டில் வாசிக்கப்பட்ட “கடந்த நூற்றாண்டில் மார்க்சிய இலக்கியம்” என்ற கட்டுரையுடன் ‘மாலைமுரசு’ பத்திரிகையில் 2012 ஆம் ஆண்டு தொடராக எழுதிய 12 கட்டுரைகளும் உள்ளடங்கியுள்ளன. குறிப்பாக டானியல் அன்ரனி, வ.அ இராசரத்தினம், சசி கிருஷ்ணமூர்த்தி, சி. பற்குணம் உள்ளிட்டோர் பற்றிய கட்டுரைகளும் இப்பகுதியில் உள்ளன.

பத்தி எழுத்துக்கள் என்ற மற்றொரு பிரிவில் குறும்படங்கள், திரைப்படங்கள் பற்றியும், ஏனைய படைப்பாளிகளின் சில தொகுப்புக்கள் பற்றியும், இலக்கியச் சர்ச்சைகள் பற்றியும் எழுதியவை உள்ளன.

இத்தொகுப்பின் மிக முக்கியமான இன்னொரு பகுதியாக நந்தினி சேவியரின் அகத்தையும் புறத்தையும் காட்டும் நேர்காணல்கள் உள்ளன. ‘தலித்’, ‘சுட்டும் விழி’ ஆகிய இதழ்கள் உட்பட இன்பராசா நிகழ்த்திய மற்றொரு நேர்காணலும் இத்தொகுப்பில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இவை தவிர கௌரிபாலன், முகைதீன் சாலி, லெனின் மதிவானம், கோபாலபிள்ளை, ஷெல்லிதாசன், இரத்தினவேலோன் ஆகியோரின் நூல்களுக்கு நந்தினி சேவியர் எழுதிய முன்னுரை மற்றும் பின்னுரைக் குறிப்புக்களும் மற்றொரு பகுதியாக இணைக்கப்பட்டுள்ளன.

நந்தினி சேவியரின் எழுத்துக்கள் பற்றி இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் முகமாக அவரின் வெளிவந்த இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களையும் ஆதாரமாக வைத்து அவ்வப்போது இ. முருகையன், முஹசீன், முகைதீன் சாலி, லெனின் மதிவானம், இதயராசன், இரண்டாம் விசுவாமித்திரன், அநாதரட்சகன், முல்லை வீரக்குட்டி, தேவி பரமலிங்கம், மேமன்கவி, செ. யோகராசா, செல்லத்துரை சுதர்சன் ஆகியோர் எழுதிய 12 பதிவுகள் அவரின் எழுத்துக்கள் பற்றி அசைபோடுவதற்கு ஏற்ற மதிப்பீடுகளாக அமைந்துள்ளன.

நூலின் இறுதியில் நந்தினி சேவியர் எழுதியவற்றுள்ள தொலைத்துவிட்ட சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள், கட்டுரைத்தொடர் ஆகிய தகவல்கள் அடங்கிய பட்டியலை வாசித்தபோது நெஞ்சம் பதைத்தது. 1966 முதல் 1974 வரை எழுதியவற்றுள் தவறிப்போன 14 சிறுகதைகளையும், ஈழநாடு இதழில் 1974 இல் 56 வாரம் தொடராக வெளிவந்த ‘மேகங்கள்’ என்ற நாவலையும் அதே ஆண்டு எம்.டி குணசேன நிறுவனக் காரியாலயத்தில் சிந்தாமணி பத்திரிகைக்கென கொடுத்த ‘கடற்கரையில் தென்னை மரங்கள் நிற்கின்றன’ என்ற நாவலையும் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்க 50 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் தங்கப் பதக்கம் பெற்ற “ஒரு வயது போன மனிதரின் வாரிசுகள்” உட்பட ‘தெளிவு பிறக்கிறது’ குறுநாவலையும் (பூம்பொழில் 1971), களஆய்வுக் கட்டுரையினையும் (ஈழமுரசு 1987) இந்த நூற்றாண்டிலேயே தொலைத்துவிட்டு நிற்கிறார் நந்தினிசேவியர். போர்ச்சூழல் காவுகொண்ட மனிதர்களின் கணக்கிலே இந்தப் படைப்புக்களின் கணக்குகளும் உள்ளடங்கி விட்டன. இன்றைய இலத்திரனியற்சூழலில் இவற்றில் சிலவற்றையாவது எங்கோ ஒரு மூலையில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற பேரவா எனக்கும் உண்டு.

ஈழத்துப் புனைகதை இலக்கியத்தில் தனித்துவமான ஆளுமைகளில் ஒருவராகத் திகழ்கின்ற நந்தினி சேவியரின் அரிதான படைப்புக்களை தமிழ்ச்சூழலில் பரவலாக்கும் பொருட்டு ஆவணப்படுத்தி ஒரு காத்திரமான நூலாகக் கொண்டு வந்த விடியல் பதிப்பகத்திற்கு நன்றி சொல்ல ஈழத்துப் படைப்புலகம் கடமைப்பட்டுள்ளது.