- குந்தவையின் “ஆறாத காயங்கள்” சிறுகதைத் தொகுப்புக் குறித்து...
– சு. குணேஸ்வரன்
“கதை எழுதவேண்டும் என்ற உந்துதலை புறச்சூழலும் நாட்டின் நடப்பு நிகழ்வுகளுமே ஏற்படுத்துகின்றன. பேரினவாதம் தலைதூக்கியாடும் எம் நாட்டில் மனத்தைச் சலனப்படுத்தி சஞ்சலப்படுத்தும் நிகழ்வுகள் பல. நான் அனேகமாக அவற்றை வைத்தே கதைகள் எழுத விரும்புகிறேன்.” என்று ஊடறு நேர்காணலில் பதிவுசெய்துள்ளார். குந்தவையின் அதிகமாக கதைகள் சாதாரண மனிதர்களைப் பற்றிய கதைகள். அவர்களின் பாடுகளைக் கூறும் கதைகள். போரின் பின்னர் சிதைந்துபோன மனிதர்களையும் அவர்களின் வாழ்வையும் கூறும் கதைகள்.
‘யோகம் இருக்கிறது’ என்ற முதற்தொகுப்பு வெளிவந்து 13 வருடங்களுக்குப் பின்னர் இத்தொகுதி வெளிவருகிறது. இவற்றில் சில கதைகள் தவிர, அதிகமானவை இறுதியுத்தத்திற்குப் பின்னர் எழுதப்பட்டவை. யுத்தப் பிரதேசத்திற்கு வெளியே வாழ்ந்தவர் குந்தவை. சகமனிதர்களின் சந்திப்பின் ஊடாகவும் வாசிப்பின் ஊடாகப் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் ஊடாகவும் இக்கதைகளைப் படைத்திருக்கிறார். காலிழப்பும் பின்பும், இரும்பிடைநீர், நீட்சி, பாதுகை ஆகியவை தனித்தனிக் கதைகளாக இருந்தாலும் அக்கதைகளில் ஒரு மையச்சரடு ஓடிக்கொண்டிருப்பதை வாசகர் அறிவர்.
யுத்தத்தில் தன் கால்களை இழந்துபோனவன் தன் பிளாஸ்ரிக் கால்களைத் தடவிக்கொண்டு கண்முன்னே சுருண்டுபோன உறவுகளைக் கண்களில் தேக்கிக் கொண்டு எதிர்காலம் பற்றிய திசையிழந்து பேதலிக்கும் கதையும்; தன் தந்தையின் உடல் கண்முன்னாலேயே சிதறியதைக் கண்ட பிள்ளையில் மனதில் ஏற்பட்ட மாறாத வடுவும்; காணாமற்போன மகனின் நினைவுகளோடு அவன் காலில் அணிந்திருந்த சிலிப்பரை தன் சேலைத் தலைப்பில் சுற்றிக்கொண்டு உறங்கும் தாய்மையின் அன்பும், நிச்சயம் ஆறாத காயங்களாகவே உள்ளன.
மறுபுறம் இருக்கும் ஏனைய கதைகள் போரால் மட்டுமல்ல, வறுமையாலும் தனிமையாலும் விரக்தியாலும் அதிகாரத்தாலும் உள்ளும் புறமும் அமுங்கிப்போன மனங்களைக்காட்டும் கதைகள். ‘ஊழியமும் ஊதியமும்’ மிக நேர்த்தியான எழுதப்பட்ட மாதிரிச் சிறுகதையாகவே இளைய சமூகத்திற்கு அறிமுகப்படுத்தக்கூடியது. குடும்பத்தில் ஒரு பெண் எதிர்கொள்ளும் உடல் - உள வாதை இக்கதையிலும் ‘நீட்சி’யிலும் வருகிறது. மேலும் மாடுகளைவிரட்டும் மனிதனை, மனிதர்களை விரட்டும் அதிகாரத்தின் குறியீடாகக் கொண்டு எழுதப்பட்ட கதையும் குறிப்பித்தக்கது. நொந்துபோன சமூகத்தின் பலவீனத்தைப் பயன்படுத்தி வளத்தைச் சூறையாடிச் செல்லும் மனிதர்களின் கதையாக ‘இரும்பிடைநீர்’ அமைகிறது. ஒட்டுமொத்தமாக எல்லாக்கதைகளும் இழப்பும் வேதனையும் ரணமும் நிறைந்தவை. கண்முன்னே கடந்து செல்லும் காலங்கள் பற்றியவை.
குந்தவையின் கதைகளில் காணப்படும் தனித்துவமான பண்புகளில் முதன்மையானது சம்பவ விபரிப்பும் கதை சொல்லும் நேர்த்தியும். இது குந்தவைக்கே உரிய தனிப்பாணி. ஈழத்து இலக்கியப் பரப்பில் மிகக்கூடிய கவனத்தைப் பெற்ற பெயர்வு, வல்லைவெளி முதலான கதைகளிலும் இந்த அம்சம் அழகாக அமைந்திருந்தது.
குந்தவையில் கதைகளில் கிராமியம் சார்ந்த பண்பாட்டு அம்சங்களையும் கண்டுகொள்ளமுடியும். கோழிக்கறி, புழுக்கம் ஆகியவை இதற்கு ஆதாரங்களாக உள்ளன. இக்கதைகளில் வருகின்ற பாத்திரங்கள் அவர் பழகுகின்ற சகமனிதர்கள்தான். இக்கதைகளில் வருகின்ற பிரதேசப் பின்னணியும் அவர் வாழ்கின்ற பிரதேசம்தான்.
யோகம் இருக்கிறது தொகுப்புக்கும் இத்தொகுப்புக்கும் இடையிலான நுண்மையான அனுபவ வெளிப்பாட்டை தேர்ந்த வாசகர்கள் உணர்ந்து கொள்ள முடியும். இக்கதைகள் அதிகமும் அவரின் முன்னைய அனுபவங்களோடு அவரின் வாசிப்பு அனுபவங்களும் மிக அரிதாகக் கிடைத்த புற அனுபவங்களையும் கொண்டு எழுதப்பட்டவை. ஆனால் அக்கதைகளில் இருக்கும் நேர்மையும் புலக்காட்சி வர்ணனையும் முக்கியமானவை. பாதுகை, நீட்சி, ஊழியமும் ஊதியமும் முதலான கதைகள் மனதை நெகிழ வைப்பவை.
தன்னுடைய முதுமைப் பருவத்திலும் தொடர்ச்சியாக எழுதி வரும் குந்தவையின் கதைகள் இந்த மண்ணின் கதைகள். இந்த மண்ணில் வாழ்ந்த – வாழ்ந்து வரும் மனிதர்களைப் பற்றிய கதைகள். உயிரோட்டமும் சம்பவ விபரிப்பும் எளிமையான மொழியும் கொண்டவை. இக்கதைகள் சகமனிதர்கள்மீது நாம் கொள்ளவேண்டிய பரிவை, ஆதரவை, மற்றவரின் துன்பத்தை உணர்ந்து கொள்ளவேண்டிய மனநிலையை வேண்டி நிற்பவை.
மூத்த பெண் எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கும் குந்தவையின் எழுத்துக்கள் வாசிக்கப்படவேண்டும். அவை நாம் கடந்து வந்த காலங்கள் பற்றிய பதிவுகளாக அமைபவை. ஈழத்து இலக்கியத்திற்கு வளமூட்டக்கூடியவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக