வியாழன், 22 ஜனவரி, 2015

நந்தினி சேவியர் படைப்புகள்


நூல் அறிமுகம்

- சு. குணேஸ்வரன்
விடியல் பதிப்பகம் நந்தினி சேவியரின் எழுத்துக்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறது. நந்தினி சேவியர் இதுவரை எழுதிய படைப்புக்களில் சிறுகதைகள், நேர்காணல்கள், கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள், நூல்களுக்கு எழுதிய முன்னுரைகள் மற்றும் நினைவுக் குறிப்புக்கள் உள்ளடங்கலாக மிகக் காத்திரமான ஒரு தொகுப்பைத் தந்திருக்கும் விடியலுக்கு ஒரு பாராட்டு சொல்லியே ஆகவேண்டும்.

1969 முதல் 2004 வரை நந்தினி சேவியர் எழுதிய 16 சிறுகதைகளும் ‘அயற்கிராமத்தைச் சேர்ந்தவர்கள்’, ‘நெல்லிமரப் பள்ளிக்கூடம்’ ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளாக ஏற்கனவே நூலுருப் பெற்றுள்ளன. அக்கதைகள் இத்தொகுப்பில் உள்ளடங்கியுள்ளமை பிரதான அம்சமாகும்.
இதற்கு அடுத்ததாக ‘தமிழ் இனி’ மாநாட்டில் வாசிக்கப்பட்ட “கடந்த நூற்றாண்டில் மார்க்சிய இலக்கியம்” என்ற கட்டுரையுடன் ‘மாலைமுரசு’ பத்திரிகையில் 2012 ஆம் ஆண்டு தொடராக எழுதிய 12 கட்டுரைகளும் உள்ளடங்கியுள்ளன. குறிப்பாக டானியல் அன்ரனி, வ.அ இராசரத்தினம், சசி கிருஷ்ணமூர்த்தி, சி. பற்குணம் உள்ளிட்டோர் பற்றிய கட்டுரைகளும் இப்பகுதியில் உள்ளன.

பத்தி எழுத்துக்கள் என்ற மற்றொரு பிரிவில் குறும்படங்கள், திரைப்படங்கள் பற்றியும், ஏனைய படைப்பாளிகளின் சில தொகுப்புக்கள் பற்றியும், இலக்கியச் சர்ச்சைகள் பற்றியும் எழுதியவை உள்ளன.

இத்தொகுப்பின் மிக முக்கியமான இன்னொரு பகுதியாக நந்தினி சேவியரின் அகத்தையும் புறத்தையும் காட்டும் நேர்காணல்கள் உள்ளன. ‘தலித்’, ‘சுட்டும் விழி’ ஆகிய இதழ்கள் உட்பட இன்பராசா நிகழ்த்திய மற்றொரு நேர்காணலும் இத்தொகுப்பில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இவை தவிர கௌரிபாலன், முகைதீன் சாலி, லெனின் மதிவானம், கோபாலபிள்ளை, ஷெல்லிதாசன், இரத்தினவேலோன் ஆகியோரின் நூல்களுக்கு நந்தினி சேவியர் எழுதிய முன்னுரை மற்றும் பின்னுரைக் குறிப்புக்களும் மற்றொரு பகுதியாக இணைக்கப்பட்டுள்ளன.

நந்தினி சேவியரின் எழுத்துக்கள் பற்றி இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் முகமாக அவரின் வெளிவந்த இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களையும் ஆதாரமாக வைத்து அவ்வப்போது இ. முருகையன், முஹசீன், முகைதீன் சாலி, லெனின் மதிவானம், இதயராசன், இரண்டாம் விசுவாமித்திரன், அநாதரட்சகன், முல்லை வீரக்குட்டி, தேவி பரமலிங்கம், மேமன்கவி, செ. யோகராசா, செல்லத்துரை சுதர்சன் ஆகியோர் எழுதிய 12 பதிவுகள் அவரின் எழுத்துக்கள் பற்றி அசைபோடுவதற்கு ஏற்ற மதிப்பீடுகளாக அமைந்துள்ளன.

நூலின் இறுதியில் நந்தினி சேவியர் எழுதியவற்றுள்ள தொலைத்துவிட்ட சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள், கட்டுரைத்தொடர் ஆகிய தகவல்கள் அடங்கிய பட்டியலை வாசித்தபோது நெஞ்சம் பதைத்தது. 1966 முதல் 1974 வரை எழுதியவற்றுள் தவறிப்போன 14 சிறுகதைகளையும், ஈழநாடு இதழில் 1974 இல் 56 வாரம் தொடராக வெளிவந்த ‘மேகங்கள்’ என்ற நாவலையும் அதே ஆண்டு எம்.டி குணசேன நிறுவனக் காரியாலயத்தில் சிந்தாமணி பத்திரிகைக்கென கொடுத்த ‘கடற்கரையில் தென்னை மரங்கள் நிற்கின்றன’ என்ற நாவலையும் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்க 50 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் தங்கப் பதக்கம் பெற்ற “ஒரு வயது போன மனிதரின் வாரிசுகள்” உட்பட ‘தெளிவு பிறக்கிறது’ குறுநாவலையும் (பூம்பொழில் 1971), களஆய்வுக் கட்டுரையினையும் (ஈழமுரசு 1987) இந்த நூற்றாண்டிலேயே தொலைத்துவிட்டு நிற்கிறார் நந்தினிசேவியர். போர்ச்சூழல் காவுகொண்ட மனிதர்களின் கணக்கிலே இந்தப் படைப்புக்களின் கணக்குகளும் உள்ளடங்கி விட்டன. இன்றைய இலத்திரனியற்சூழலில் இவற்றில் சிலவற்றையாவது எங்கோ ஒரு மூலையில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற பேரவா எனக்கும் உண்டு.

ஈழத்துப் புனைகதை இலக்கியத்தில் தனித்துவமான ஆளுமைகளில் ஒருவராகத் திகழ்கின்ற நந்தினி சேவியரின் அரிதான படைப்புக்களை தமிழ்ச்சூழலில் பரவலாக்கும் பொருட்டு ஆவணப்படுத்தி ஒரு காத்திரமான நூலாகக் கொண்டு வந்த விடியல் பதிப்பகத்திற்கு நன்றி சொல்ல ஈழத்துப் படைப்புலகம் கடமைப்பட்டுள்ளது.
- 

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

நவீன தேடல்கள் நிறைந்த யாழ் மண்ணின் பதிவுகள்


பத்தி

- சு. குணேஸ்வரன்

(குறிப்பு - பிரதேசம் சார்ந்த நவீன இலக்கிய வளர்ச்சி தொடர்பாக 2000 ற்குப் பின்னர் யாழ்மாவட்ட இலக்கியச் செயற்பாடுகள் தொடர்பாக ஒரு வினாவை மகுடம் ஆசிரியர் அனுப்பியிருந்தார். அதற்கு எழுதப்பட்ட சுருக்கமான பதிலே இங்கு தரப்படுகிறது.)


2000 ற்குப் பின்னரான காலம் அரசியல் ரீதியில் பல மாற்றங்களைக் கொண்டதாக இருக்கிறது. போரும் – சமாதானமும், போரும் - அழிவும் என மாறியகாலம். இக்காலங்களில் எழுந்த கலை இலக்கியங்களும் மக்களின் துன்பங்களையும் அதிலிருந்து மீளமுடியாத வாழ்க்கையையும் எடுத்துக் காட்டுவனவாகவே அமைந்திருந்தன. இவற்றை மிக நுண்மையாகத்தான் நோக்கவேண்டும். ஆனாலும் சில பொதுவான ஓட்டங்களை இங்கு சுட்டிக்காட்டலாம்.

கவிதையைப் பொறுத்தவரையில் குறிப்பிடத்தக்க முயற்சிகள் நடந்தேறியிருக்கின்றன. குறிப்பாக யாழ்ப்பாணம் ஏனைய பிரதேசங்களில் இருந்து முற்றாகத் துண்டிக்கப்பட்டு மூடுண்ட காலமாக இருந்தபோது வெளிவந்த படைப்புக்கள் மக்களின் இயல்புவாழ்க்கை அழிக்கப்பட்டதன் வெளிப்பாடுகளைப் புலப்படுத்துவனவாக அமைந்திருந்தன. இக்காலத்தில் ஆயுதம் தரித்த எல்லாத்தரப்பினரிடம் இருந்தும் மக்கள் பல்வேறுவிதமான வாழ்க்கை முரண்பாடுகளை எதிர்கொண்டனர். குறிப்பாக அக்காலத்தில் வெளிவந்த தீபச்செல்வன், சித்தாந்தன், துவாரகன், சத்தியபாலன் ஆகியோரின் கவிதைகளின் ஊடாக இந்த மூடுண்ட காலங்களை அறிந்துகொள்ளமுடியும். அப்போது வெளிவந்த மூன்றாவது மனிதன் சஞ்சிகையில் ஹரிகரசர்மா எழுதிய ‘யாழ்ப்பாண நாட்குறிப்புகள்’ என்ற புனைவுசாரா எழுத்துக்களையும் இக்கவிதைகளோடு இணைத்து நோக்கலாம்.

தொடர்ந்து போருக்குப் பின்னரான தொகுப்புக்களில் பா. அகிலன், நிலாந்தன், கருணாகரன், தானா விஷ்ணு, ந. மயூரரூபன், கி.பி நிதுன் ஆகியோரின் கவிதைகள் அதிக கவனத்தைக் கோருவனவாக அமைந்துள்ளன. இவை தவிர இக்காலத்தில் வெளிவந்த வேறு பல தொகுப்புக்களிலும் மக்களின் பல்வேறு நெருக்கடிகள் பதிவாகியுள்ளன. த. அஜந்தகுமார், யாத்திரீகன், செ.சுதர்சன், இ.சு முரளிதரன், ஐ. வரதராசன், கு. றஜீபன், பெரிய ஐங்கரன், கை. சரவணன் என்று பலரின் தொகுப்புக்களைக் கூறலாம். கவிஞர் சோ. பத்மநாதனும் தொடர்ச்சியாக இக்காலத்தில் எழுதிவந்துள்ளார்.

அண்மையில் வெளிவந்த ஓவியர் சனாதனனின் ‘The Incomplete Thombu’ முக்கியமான நூலாக அமைந்துள்ளது. ஓவியமும் புனைவும் வரலாறும் இணைந்த வகையில் தமிழர் வாழ் பிரதேசம் பற்றியும் அவர்களின் வாழ்வனுபவம் பற்றியும் பன்முக வாசிப்புக்குரிய தளத்தை ‘தோம்பு’ கொடுக்கிறது. போர்க்கால வாழ்வின் விளைவுகளைப் புதிய வடிவத்தில் தருகிறது. இது தமிழ்ப் படைப்புச் சூழலுக்குப் புதியது.

சிறுகதைத்துறையில் உருவப்பரிசோதனைகள் மூலம் இராகவன், மருதம் கேதீஸ், சித்தாந்தன் ஆகியோர் தருகின்ற கதைகள் கவனத்திற்குரியன. போருக்குப்பின்னரான சிறுகதைகளில் அதிக கவனத்தைக் கோருவனவாக யோ.கர்ணன், கருணைரவி ஆகியோரின் சிறுகதைத் தொகுப்புக்கள் வந்துள்ளன. இராஜேஸ்கண்ணன், சீனா உதயகுமார், தாட்சாயணி, சாரங்கா, விஸ்ணுவர்த்தனி, ஆகியோரின் முயற்சிகள் கவனத்திற்குரியன. இயல்வாணனின் சிறுகதைகளும் சிறுவர் கதைகள் அடங்கிய தொகுப்பு நூலும் இக்காலத்தில் வந்துள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளிவந்த ‘இங்கிருந்து’, ‘பசியடங்கா இருளிலிருந்து ஒன்பது கதைகள்’, ‘மண்ணின் மலர்கள்’ ஆகியன முக்கியமான தொகுப்புக்கள். இவைதவிர மூத்த படைப்பாளிகளான தெணியான், குப்பிழான் ஐ. சண்முகன், நந்தினி சேவியர், குந்தவை, யோகேஸ்வரி சிவப்பிரகாசம், சட்டநாதன், கே.ஆர் டேவிட், த. கலாமணி, அநாதரட்சகன், கொற்றை பி .கிருஸ்ணானந்தன், ஆகியோரின் சிறுகதைத் தொகுதிகளும் இக்காலகட்ட வாழ்வியலின் பல்வேறு நெருக்கடிகளை வெளிப்படுத்துகின்றன.


கவிதை சிறுகதைகளோடு ஒப்பிடுகின்றபோது நாவல் முயற்சி தேக்க நிலையிலேயே உள்ளது. இக்காலத்தில் செங்கை ஆழியானின் ‘போரே நீ போ’, ‘வானும் கனல் சொரியும்’ ‘மீண்டும் வருவேன்’, ‘ருத்ர தாண்டவம்’, தெணியானின் ‘தவறிப்போனவன் கதை’ கலையார்வனின் ‘உப்புக்காற்று’ ஆகியன வெளிவந்துள்ளன. வேறு முயற்சிகள் நடைபெற்றதாகத் தெரியவில்லை.

ஆய்வு நிலையில் பல்கலைக்கழகத்தைச் சார்ந்துதான் பலர் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நிகழ்த்திய ஆய்வரங்குகள், மற்றும் அரசு சார்ந்து பிரதேச ரீதியாக நடைபெற்ற ஆய்வரங்குகளும், முக்கியமானவை. தூண்டி இலக்கிய வட்டம் 2003 இல் ‘ஈழத்துத் தமிழ்க் கவிதை’ தொடர்பாக நிகழ்த்திய ஆய்வரங்கும் திருமறைக் கலாமன்றம் நிகழ்த்திய ஆய்வரங்கும் குறிப்பிடத்தக்கவை. ஆனால் அதிகமான ஆய்வரங்கக் கட்டுரைகள் தாமதமாகவே நூலுருப்பெறுவதனால் உரிய நேரத்தில் கவனத்தைப் பெறத் தவறிவிடுகின்றன.

விமர்சன வளர்ச்சி ஈழத்திலே தொடர்ந்தும் தேக்க நிலையில்தான் உள்ளது. எனினும் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் தொடர்ச்சியாக இத்துறையில் இயங்கி வருகின்ற அ. யேசுராசா, செ. யோகராசா ஆகியோர் முக்கியமானவர்கள். மேலும் கல்வியியல்துறைக்கு ஊடாக வருகின்ற சபா ஜெயராசாவின் பங்களிப்பும் முக்கியமானது. அண்மைக்காலத்தில் பா.அகிலன், க.அருந்தாகரன், ஆகியோர் பனுவல் இதழுக்கு ஊடாகவும் மானிடவியல் துறைசார் வாசிப்புக்களை நிகழ்த்தி வருவதும், இலக்கியம் மற்றும் அரசியற்தளத்தில் நிலாந்தனின் பங்களிப்பும் கவனத்திற்குரியன. யாழ். பல்கலைக்கழகம் சார்ந்து துறை ரீதியாக இயங்குபவர்கள் பலர். இவர்களில் ஈ. குமரன், கந்தையா சிறீகணேசன் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

புதிய தலைமுறையினர் பலர் இதழ்களுக்கு ஊடாக (கூடம், மறுபாதி, தவிர ,கலைமுகம், ஞானம், ஜீவநதி) இயங்குகின்றனர். இவை பற்றிய மதிப்பீடுகளுக்கு மேலும் காலமிருக்கிறது என்று எண்ணுகிறேன்.

யாழ்ப்பாணத்தில் எல்லாப் படைப்பாளிகளையும் ஒன்றிணைக்கக்கூடிய காத்திரமான இலக்கிய அமைப்பு என்று குறிப்பிடுவது கடினம். அரசியற்கட்சிகள் போலத்தான் இலக்கியக்காரர்களும் பிளவுண்டு இருக்கிறார்கள். முன்னர் இயங்கிய தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்திடமும் இந்தக் குறைபாடு இருந்தது. தவிர்க்கமுடியாமல் எல்லோரையும் இணைக்கும் நிகழ்வுகளெனில் அவை களியாட்டங்களாகக்தான் இருக்கவேண்டும். மிகப்பெரும் எடுப்பில் நிதியை இறைத்துச் செய்யப்படும் கலை இலக்கிய நிகழ்வுகள்கூட இறுதியில் ஒப்புக்காக நடைபெறுவனவாகத்தான் அமைகின்றன.

இந்த நிலையில் தவிர்க்கமுடியாமல் சிறிய சிறிய குழுக்களாக ஒருமித்த நிலையில் இயங்குகின்ற இலக்கிய அமைப்புக்களால்தான் சிறியளவிலாவது இலக்கிய முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லமுடிகிறது. அறிவோர்ஒன்றுகூடல், அவை, உயில்/
, இளங்கோ கழகம், இணுவில் இலக்கிய வட்டம், யாழ் இலக்கிய வட்டம், சமூக விஞ்ஞான படிப்பு வட்டம் ஆகியன தம்மளவில் சில காத்திரமான வேலைகளைச் செய்து வருகின்றன. இவற்றோடு பல்கலைக்கழக மட்டத்திலும் இதழ்கள் சார்ந்தும் பலர் செயற்படுகிறார்கள். சுன்னாகம் பொதுநூலகத்தின் ஊடாக பல காத்திரமான முயற்சிகள் முன்மாதிரியாக முன்னெடுத்துச் செல்லப்படுவதும் கவனத்திற் கொள்ளத்தக்கதாக அமைந்துள்ளது.


திருமறைக்கலாமன்றத்தின் நாடக முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இக்காலத்தில் அவர்கள் ஆற்றுகை செய்த பல நாடகங்கள் உள்ளன. அவற்றுள் ‘அற்றைத்திங்கள்’ முக்கியமானது. மேலும் ஈழத்து இசை நாடக வரலாற்றில் புதிய முயற்சியாக அண்மையில் மேடையேறிய குழந்தை சண்முகலிங்கத்தின் ‘கண்டனள் சீதையை’, செயல்திறன் அரங்க இயக்கத்தினரின் செயற்பாடுகள், மற்றும் தே. தேவானந் முயற்சியில் அண்மையில் வெளியரங்கில் நிகழ்த்தப்பட்ட நாடகங்கள் முக்கியமானவை. இவை தவிர இசை நாடக விழாக்கள், பாடசாலை மட்டங்களில் நிகழ்த்தப்பட்ட காத்திரமான நாடகங்கள் பல உள்ளன. இவற்றுக்கு அப்பால் கிராமங்களில் இன்னமும் உயிர்த்துடிப்போடு இருக்கின்ற பாரம்பரிய கூத்து மரபில் இருந்து வந்த கூத்துக்கலைகள் குறிப்பாக வடமராட்சியில் அல்வாய், மாதனை, தும்பளை, குடத்தனை ஆகிய பிரதேசங்களும்; வலிகாமத்தில் வட்டுக்கோட்டையிலும் யாழில் பாசையூரிலும் தொடர்ச்சியாக கூத்துக்கள் ஆடப்பட்டு வருகின்றன. இவை உரியவகையில் ஆவணப்படுத்தவேண்டியவையாக உள்ளன.

இதழியல் முயற்சிகள் முன்னர்போல தொடர்கின்றன. ஆனால் அவர்களின் முயற்சிகளுக்கு ஏற்ப பலன் கிடைக்கின்றனவா என்பது இன்னமும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. இதழ்களை வெளியிட்டுவிட்டு டொமினிக் ஜீவா கூறுவதுபோல தலையிற் சுமந்து விற்கவேண்டிய நிலையிலேயே இன்றும் ஈழத்து இதழியற்சூழல் உள்ளது. சமூகத்தின் பல மட்டங்களையும் சகல நூலகங்களையும் அவை சென்றடைகின்றனவா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் பல இதழ்கள் வந்து நின்றுவிட்டன. குறிப்பாக கவிதை, தெரிதல், கூத்தரங்கம், அம்பலம், தூண்டி, புதியதரிசனம், புலரி ஆகிய இதழ்கள் அவற்றுள் முக்கியமானவை. இன்று வெளிவருவனவற்றுள் கலைமுகம், தவிர, மறுபாதி, ஜீவநதி, தாயகம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இன்னமும் பல இதழ்கள் வருகின்றன.

கொழும்பிலிருந்து வெளிவருகின்ற ஞானம், மல்லிகை, கலைக்கேசரி ஆகியவற்றில் யாழ்ப்பாணத்துப் படைப்பாளிகளின் பங்களிப்பு கவனத்திற்குரியது. குறிப்பாக கலைக்கேசரியில் வருகின்ற தமிழ்ப்பண்பாடு, வரலாறு தொடர்பான கட்டுரைகள் முக்கியமானவை. பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா எழுதி வருகின்ற “யாழ்ப்பாணத்து வாழ்வியல்” தொடர்கட்டுரையும், பேராசிரியர் எஸ். புஷ்பரட்ணம் வரலாறு, தொல்லியல் தொடர்பாக எழுதிவருகின்ற கட்டுரைகளும், பத்திரிகைகளில் கோகுலராகவன், வேதநாயகம் தபேந்திரன் ஆகியோர் யாழ்ப்பாணப் பண்பாட்டினை புனைவுசாரா வகையில் ஆவணப்படுத்தி வருகின்றமையும் இக்காலத்தில் கவனத்திற்கொள்ளத்தக்கனவாக உள்ளன.
ஆனால் ஈழத்து இதழியற் சூழலில் மறுமலர்ச்சி, அலை, மூன்றாவது மனிதன் போன்ற இதழ்கள் ஏற்படுத்திய பாதிப்பினை தற்போது வெளிவருகின்ற இவ்விதழ்கள் ஏற்படுத்தியுள்ளனவா என்பதையும் நாங்கள் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.

எனவே 2000 ற்குப் பின்னரான யாழ்ப்பாணத்து இலக்கிய முயற்சிகளில் ஒவ்வொரு இலக்கிய வடிவத்திலும் கவனத்திற்குட்படுத்த வேண்டியவற்றை இங்கு சுட்டிக்காட்டியுள்ளேன். கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய இலக்கிய வடிவங்கள் ஏற்கெனவே நடைபெற்ற ஆய்வரங்குகளில் கவனப்படுத்தப்பட்டுள்ளன. ஏனையவையும் விரிவான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியனவாகும்.

நன்றி :- மகுடம், இதழ் - 5,ஜனவரி – மார்ச் 2013.


மேலதிக இணைப்பு -

இங்கு குறிப்பிட்டவற்றுள் சிறுகதைப்பகுதியில் குந்தவை தொடர்ச்சியாக எழுதிவருகிறார் என்பதனால் அவரது பெயர் சிறுகதை தொடர்பான பகுதியில் கவனத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கவிதைகளில் த. ஜெயசீலன், சிறீபிரசாந்தன் ஆகியோரும் கவனத்திற் கொள்ளப்படவேண்டியவர்கள்.

இலக்கிய அமைப்புக்களில் 'யாழ் இலக்கியக் குவியம்' அண்மைக்காலத்தில் புதிய இளம் படைப்பாளிகளை ஊக்குவித்து வருகிறது.

ஆய்வு மற்றும் விமர்சனம் தொடர்பாக புதிய தலைமுறையினர் மிக ஈடுபாட்டுடன் இயங்கி வருகிறார்கள். இவர்கள் பற்றி விரிவாக மேலே குறிப்பிடவில்லை. குறிப்பாக இதழ்களுக்கு ஊடாக இவர்களின் வருகை கவனத்திற்கொள்ளவேண்டும். கட்டுரையாசியர் உட்பட சி. ரமேஸ், செ. சுதர்சன், சிறீபிரசாந்தன், இ. இராஜேஸ்கண்ணன், சி. விமலன், த. அஜந்தகுமார் ஆகியோர் அண்மைக்காலத்தில் தீவிரமாக ஆர்வத்துடன் செயற்பட்டு வருகிறார்கள்.


திங்கள், 24 ஜூன், 2013

"கெருடாவில் - ஊர்ப்பெயர் வரலாறு" - ஒரு குறிப்பு

கெருடாவில் மாயவர் ஆலயம்

- சு. குணேஸ்வரன்

            ‘கெருட + ஆவில் = கெருடாவில்’ என அமையும். ‘கெருடன்’ ‘கருடன்’ என்பன தமிழ் அகராதிப்படி ஒரே அர்த்தத்தைக் குறிப்பனவாகும்.     மேலும் நோக்கினால் ‘கெருடன்’ என்ற பறவையை விஷ்ணுவுக்குரியதாகக் கொள்வர். ‘ஆ’ என்பது பசு. ‘வில்’ என்பது வில் வளைவிலான குளம், அரைவட்டம், சிறுகுளம், ஆகியவற்றைக் குறிக்கும். அதாவது ‘சிறிய குளம்’ எனக் கருதலாம். ‘வில்’ என்ற கருவி எவ்வாறு அரைவட்டமாக வளைத்து எய்யப்படுகிறதோ அதேபோல அரைவட்ட வடிவ சிறிய நீர் நிலைகளைக் குறிப்பிட ‘வில்’ என்ற சொல் பயன்பாட்டில் இருந்துள்ளது. இவை பழந்தமிழ் இலக்கியங்கள்  ஊடாக நாம் அறியும் செய்திகளாகும். 

            கெருடாவில் பிரதேசம் குறிப்பாக ஆரம்பத்தில் ஈறள் காடுகளைக் (நெருக்கமாக இருந்த காடு) கொண்ட பிரதேசமாக அமைந்திருந்ததால் கருடன் என்ற பறவையினம் அதிகம் இருந்திருக்கலாம். (அதிகமான ஊர்ப்பெயர்கள் உயிரினங்களின் பெயர்களுடன் இணைத்து காரணப்பெயராக வழங்கப்பட்டிருக்கின்றன. உதாரணம் :- கெருடாவில் - (கெருடன்), கொக்குவில் - (கொக்கு), மந்துவில் - (மந்தி), நவிண்டில் (நண்டு) போன்ற ஊர்ப்பெயர்களை ஞாபகப்படுத்தலாம்.) அதேபோல் அங்கிருந்த நீர் நிலையின் காரணத்தால் ‘வில்’ என்பதும்  வந்திருக்கமுடியும் என்று கருதலாம்.

     மாயவர் கோவிலுக்கு அருகில் உள்ள கெருடாவில் அம்மன் கோவிலிலிருந்து கெருடாவில் பாடசாலைக்குச் செல்லும் கிழக்கு வீதியில் அமைந்துள்ள பிள்ளையார் கோவிலுக்கும் இடையில் தெற்குப்புறமாக முன்னர் ஒரு சிறிய குளம் இருந்ததாக மூதாதையர் குறிப்பிடுகின்றனர். அக்குளம் இருந்த இடம் ‘பால்மோட்டை’ என தொட்டில் கந்தசாமி கோவில் ஆலய பாலசுப்பிரமணியக் குருக்கள் குறிப்பிடுகிறார்.

    தற்காலத்தில் மழைபெய்தபின்னர் அதனை அண்டிய பிரதேசத்தில் நீர் நிரம்பியிருத்தலையும் கண்டுகொள்ளமுடியும். அதுமட்டுமல்லாமல் கோட்டைச்சீமா அம்மன் கோயிலின் கிழக்குப்புறத்தின் ஊடாகவும், கெருடாவில் மாயவர் கோவிலுக்கு தெற்குப்புறமாகவும், வடக்குத் தெற்கு பாடசாலை வீதிவழியாக வரும் நீரும் மழைக்காலத்தில் இவ்விடத்தில் தேங்குவதனை அவதானிக்கலாம். குளம் இருந்ததாகக் கருதப்படும் இடத்தில் இப்பொழுதும் கொண்டல் மரங்கள் காணப்படுகின்றன. 

            இப்பகுதிக்கு அருகில் பிராமண வகுப்பினர் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வாழ்விடத்திற்குரிய காணிகளின் பெயர்களை அல்லது தோம்புகளைத் தேடுவதன் ஊடாகவும் இவ்விடத்தில் இருந்த குளமும் அது தொடர்பான காரணப்பெயரும் மேலும் உறுதி செய்வதற்கு வாய்ப்பிருக்கும்.

            இந்தப் பிரதேச நிலவமைப்பை அடிப்படையாகக் கொண்டு மேலும் சில ஆதாரங்களை சுட்டிக்காட்டலாம். மயிலியதனை, என்பது ‘மயிலம்’ என்னும் மரத்தின் பெயரால் உருவானது. கேணித்தோட்டம் என்று இன்று வழங்கப்படும் பெயர் ‘நீர்நிலை’ மற்றும் ‘சிறு குளம்’ என அர்த்தப்படும்.  மற்றும் வயல் சார்ந்த மருதநிலத்தின் ஊர்ப்பெயர்களாக ‘வில்’, ‘பள்ளி’  ஆகியனவும் வழங்கப்படுகின்றன. அதனால்தான் பள்ளிவாசல் என்பது - பள்ளவாசல் என அழைக்கப்பட்டிருக்கலாம். (நீர் தேங்கக்கூடிய பள்ளமான நிலப்பிரதேசத்தைக் கொண்டதனாலும் இப்பெயர் வழங்கப்பட்டிருக்கலாம்), இதன் அடிப்படையிலேயே ‘வில்’ என்பதும் கெருடாவிலைப் பொறுத்தவரையில் சிறிய குளத்தைக் குறிப்பிடவே வழங்கங்கப்பட்டிருக்கிறது என்ற முடிவுக்கு வரமுடிகிறது.

(கெருடாவில் மாயவர் ஆலயத்தின் தோற்றத்திற்கு வித்திட்டவரும் ஆலய குருவாக விளங்கியவருமாகிய திரு க. செல்லன் (மாயவர் ஐயா) அவர்களின் மறைவின் 31 ஆம் நினைவு மலருக்கு எழுதப்பட்ட கட்டுரையில் இருந்து ஒரு பகுதி)

செவ்வாய், 26 மார்ச், 2013

இலக்கியத் திருடர்களுக்கு யார் தண்டனை கொடுப்பது?


- சு. குணேஸ்வரன்

திருட்டுக்கள் பலவிதம். அதில் பேசப்படாத திருட்டு 'அறிவுத்திருட்டு'. அதில் ஒரு பகுதி 'இலக்கியத்திருட்டு'. ஒருவர் மிகக்கடினப்பட்டு தனது நேரம்,பொருள், உழைப்பு எல்லாவற்றையும் செலவளித்துத்தான் ஏதோ எழுதுகிறார். அது தகுதியோ இல்லையோஅவரவரின் சொந்தப் படைப்பாக அல்லது முயற்சியாக அமையும்போது அதற்கு மதிப்புக் கொடுத்தான் ஆகவேண்டும். இதுதான் நீதியும்கூட. 

எழுதுபவை எல்லாம் சமூகம் பயன்படுத்திக் கொள்ளத்தான். அதைத்தான் எங்கள் முன்னோர் செய்திருக்கிறார்கள். இன்னும் மற்றவர்களும் செய்கிறார்கள். ஆனால் முன்னரே எழுதியவற்றை முறையாக எடுத்தாளுபவர்களைப் பற்றி யாரும் குறைசொல்லப்போவதில்லை. 

ஒருவர் எழுதிய கட்டுரையின் தொடரை அல்லது பகுதியை உரிய மேற்கோளுடன் பயன்படுத்தவேண்டும்.  இதுதான் இலக்கிய தர்மமும்கூட. (முழுமையாகவே களவெடுத்து பெயர் வாங்குபவர்களும் இருக்கிறார்கள்) ஆனால் எங்கள் திருட்டு ஜாம்பவான்கள் மிக இலகுவாக குழந்தையின் கையில் இருந்து காகம் வடையைத் தட்டிப் பறிப்பதுபோல தட்டிப்பறித்துச் செல்கிறார்கள்.

சரி எழுதினவர் பெயரைப் போடத் துணிச்சல் இல்லாவிட்டாலும்  எங்கே இருந்து இந்தப் பகுதியை எடுத்தாய் என்றாவது போடலாம் அல்லவா? 

அவரவர் தண்டனை கொடுப்பதற்கு - கசையடி கொடுக்கிறார்கள், சிறையில் தள்ளுகிறார்கள், தண்டப்பணம் வாங்குகிறார்கள்,  தலையை வெட்டுகிறார்கள், கொடும்பாவி எரிக்கிறார்கள்,  கோஷம் போடுகிறார்கள்.

இலக்கியத் திருடர்களுக்கு நாங்கள் என்னதான் தண்டனை கொடுப்பதாம்? 

. 

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

கவிஞர் சண்முகம் சிவலிங்கம் – கிளர்த்தும் நினைவுகள்




சு. குணேஸ்வரன் (துவாரகன்)

ஈழத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவராகிய சண்முகம் சிவலிங்கம் அவர்கள் காலமாகிவிட்டார் என்ற செய்தி நந்தினிசேவியர் ஐயா மூலம் இன்று (20-04-2012) பகல் அறியநேர்ந்தது.

சண்முகம் சிவலிங்கம் என்றாலே ‘ஆக்காண்டிப் பாடல்’தான் ஞாபகம் வரும். ‘ஆக்காண்டி’ என்ற நாட்டார் பாடலில்; தனது குஞ்சுகளை ஒவ்வொன்றாக இழந்த தாய்ப்பறவையின் சோகம் காற்றில் இழைந்து வருவதை எல்லோரும் அறிவர். அதே ஆக்காண்டிப் பாடலை அடிப்படையாக வைத்து சண்முகம் சிவலிங்கம் எழுதிய பாடலும் எங்கள் வாழ்க்கையைப் பாடும் பாடலாக அமைந்திருந்தது.

1988 இல் வெளிவந்த “நீர்வளையங்கள்” என்ற தொகுப்பினூடாக இலக்கிய உலகில் நிலையான இடத்தைப் பெற்றுவிட்டார். அதன்பிறகு 2010 இல் தான் அவருடை ய இரண்டாவது தொகுதியான “சிதைந்துபோன தேசமும் தூர்ந்து போன மனக்குகையும்“ வெளிவந்தது. இந்த இரண்டாவது தொகுப்பு ஒரு காவியம்போலவே தொகுக்கப்பட்டுள்ளதை படிப்பவர் உணர்வர்.

அண்மைக்காலங்களில் அவர் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை. விமர்சனத்தின் புதிய போக்குகளை அவை இனங்காட்டத்தக்கவை. கவிதைகளோடு சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, விமர்சனம் ஆகிவற்றிலும் தன் ஆளுமையைச் செலுத்திவந்துள்ளார். ஆனால் கவிதையே அவரை ஒரு அழியாக் கவிஞனாக நிலைநிறுத்தியுள்ளளது.


கவிஞர் சண்முகம் சிவலிங்கம் பற்றி மூன்று ஞாபகங்கள் என்னிடம் உள்ளன.

அன்னாரை ஒரே ஒருமுறைதான் நேரில் காணக்கிடைத்தது. அப்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த தி. செல்வமனோகரனின் ‘தூண்டி’ என்ற இலக்கிய இதழ் 2003 இல் யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் 3 நாள் ஆய்வரங்கை ஏற்பாடு செய்திருந்தது. அதில் கவிதை தொடர்பான அரங்கில் சண்முகம் சிவலிங்கம் உரையாற்ற வந்திருந்தார்.  வ.ஐ.ச ஜெயபாலன், ஒட்டமாவடி அறபாத், மு. பொ ஆகியோரின் கவிதைகள் பற்றியே அவரின் உரை அமைந்தது. அன்றையதினம் அவரை நேரில் கண்டிருக்கிறேன். ஆனால் உரை கேட்கக் கிடைக்கவில்லை.

மற்றும் ஒரு சந்தர்ப்பம் நான் அப்போது யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவனாக இருந்தபோது  “நாட்டார் இசைமாலை” என்ற நிகழ்வினை யாழ்ப்பாணம் நாட்டார் வழக்கியற் கழகத்தினூடாக பேராசிரியர் அ. சண்முகதாஸ் மற்றும் மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோரின் வழிகாட்டலில் நண்பர்களுடன் பயின்று (1999) அதனை பல இடங்களில் நிகழ்த்தினோம். முக்கியமாக ஆக்காண்டிப்பாடல், பண்டிப்பள்ளுப்பாடல், முசுறுப்பாடல், தாலாட்டு முதல் வேடிக்கைப்பாடல் வரையான பலவகையான நாட்டார்பாடல்கள் அங்கு நிகழ்த்தப்பட்டன. ஆனால் ஆக்காண்டிப்பாடலை தனிக்குரலில் தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருக்கும் நண்பி சுகன்யா தனியாக முதலில் பாட; நாங்கள் கோரஷாக பாடுவோம். அப்போது அந்தப் பாடலில் இழைந்து வரும் சோகம் வார்த்தைகளால் சொல்லமுடியாது. அந்த நேரங்களில் எல்லாம் சண்முகம் சிவலிங்கம் எழுதிய ஆக்காண்டிப்பாடல் பற்றியும் அறிந்திருந்தோம். அதன்பிறகு நான் பணியாற்றிய பாடசாலைக் கலை நிகழ்வுகளில் அந்தப்பாடலை மாணவர்களுக்கு பழக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தவறாமல் கவிஞர் சண்முகம் சிவலிங்கத்தின் பெயரும் எப்படியோ வந்துவிடும்.

இன்னொரு சந்தர்ப்பம் 2008 இல் எனது “மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள் “ தொகுப்பு வெளிவரமுன்னர் அ.யேசுராசா அவர்களிடம் கவிதைகளில் இருக்கும் முரண்கள், தவறுகள், திருத்தங்கள் தொடர்பாக பேசிக்கொண்டிருந்தபோது "முதுகுமுறிய பொதி சுமக்கும் ஒட்டகங்கள்" என்ற எனது கவிதையை சிலாகித்து சண்முகம் சிவலிங்கத்தின் கவிதை ஒன்றுடன் தொடர்புபடுத்தி உரையாடினார். அது எனக்கும் உற்சாகத்தைத் தருவதாக அமைந்திருந்தது. பல்கலைக்கழகத்தில் கற்கைநெறிக்காக நாங்கள் கவிதைகளை அறிந்து கொண்ட சந்தர்ப்பங்கள்; மேலும் ஈடுபாட்டோடு பல கவிஞர்களைத் தேடிப்படிக்க வைத்தன. அப்போது மீண்டும் மீண்டும் வாசிக்கவேண்டியவராக சண்முகம் சிவலிங்கம் எங்கள் முன் இருந்தார்.

இந்த மூன்று ஞாபகங்களும் தவிர்க்கமுடியாமல் சண்முகம் சிவலிங்கம் அவர்களின் மறைவின்போது முன்னால் வந்துவிடுகின்றன.
ஈழத்துக் கவிதை வரலாற்றில் தவிர்க்கமுடியாத ஆளுமையாக என்றும் நிலைத்திருக்கும் பெருமைக்குரியவர் கவிஞர் சண்முகம் சிவலிங்கம்.
அன்னாருக்கு எங்கள் அஞ்சலிகள்

நான் மேலே குறிப்பிட்ட இரண்டு கவிதைகளையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
1.
இன்று இல்லெங்கிலும் நாளை

-சண்முகம் சிவலிங்கம்

எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன.
எங்கள் இமைகள் கவிந்துள்ளன.
எங்கள் உதடுகள் அண்டியுள்ளன.
எங்கள் பற்களும் கண்டிப்போய் உள்ளன.
நாங்கள் குனிந்தே நடந்து செல்கிறோம்.

எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக.
எங்களை நீங்கள் வண்டியில் பூட்டுக.
எங்கள் முதுகில் கசையால் அடிக்குக.
எங்கள் முதுகுத்தோல் பிய்ந்துரிந்து போகட்டும்
தாழ்ந்த புருவங்கள் ஓர்நாள் நிமிரும்
கவிந்த இமைகள் ஒருநாள் உயரும்.
இறுகிய உதடுகள் ஒருநாள் துடிதுடிக்கும்.
கண்டிய பற்கள் ஒருநாள் நறநறக்கும்.

அதுவரை நீங்கள் எங்களை ஆள்க.
அதுவரை உங்கள் வல்லபம் ஓங்குக.
---



2.
ஆக்காண்டி ஆக்காண்டி

-சண்முகம் சிவலிங்கம்

”ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.

வைத்ததுவோ ஐஞ்சு முட்டை
பொரித்ததுவோ நாலு குஞ்சு
நாலு குஞ்சுக் கிரை தேடி
நாலுமலை சுற்றி வந்தேன்.
மூன்று குஞ்சுக் கிரைதேடி
மூவுலகம் சுற்றி வந்தேன்.

ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.

குஞ்சு பசியோடு
கூட்டில் கிடந்த தென்று
இன்னும் இரைதேடி
ஏழுலகும் சுற்றி வந்தேன்.

கடலை இறைத்துக்
கடல் மடியை முத்தமிட்டேன்.
வயலை உழுது
வயல் மடியை முத்தமிட்டேன்.

கடலிலே கண்டதெல்லாம்
கைக்கு வரவில்லை.
வயலிலே கண்டதெல்லாம்
மடிக்கு வரவில்லை.


கண்ணீர் உகுத்தேன்
கடல் உப்பாய் மாறியதே.
விம்மி அழுதேன்
மலைகள் வெடித்தனவே.

ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.

வண்டிகள் ஓட்டி
மனிதர்க் குழைத்து வந்தேன்.

கையால் பிடித்துக்
கரைவலையை நானிழுத்தேன்.

கொல்லன் உலையைக்
கொளுத்தி இரும்படித்தேன்.

நெய்யும் தறியிலே
நின்று சமர் செய்தேன்.

சீலை கழுவி
சிகையும் அலங்கரித்தேன்.

வீதி சமைத்தேன்.

விண்வெளியில் செல்லுதற்குப்
பாதை சமைக்கும்
பணியும் பல புரிந்தேன்.

ஆனாலும் குஞ்சுக்கு
அரை வயிறு போதவில்லை.
காதல் உருகக்
கதறி அழுது நின்றேன்.

கதறி அழுகையிலே
கடல் இரத்தம் ஆயினதே.
விம்மி அழுகையிலே
வீடெல்லாம் பற்றியதே.

கடல் இரத்தம் ஆகுமென்று
கதறி அழவில்லை.
வீடுகள் பற்றுமென்று
விம்மி யழவில்லை.

ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.

குஞ்சு வளர்ந்ததும்
குடல் சுருங்கி நின்றார்கள்.

பசியைத் தணிக்கப்
பலகதைகள் சொல்லி வந்தேன்.

கடலை இறைத்துக்
களைத்த கதை சொல்லி வந்தேன்.

வயலை உழுது
மடிந்த கதை சொல்லி வந்தேன்.

கொல்லன் உலையும்
கொடுந் தொழிற் சாலையதும்
எல்லா இடமும்
இளைத்த கதை சொல்லி வந்தேன்.

சொல்லி முடிவதற்குள்
துடித்தே எழுந்து விட்டார்.
பொல்லாத கோபங்கள்
பொங்கி வரப் பேசுகின்றார்.

"கடலும் நமதன்னை
கழனியும் நமதன்னை
கொல்லன் உலையும்
கொடுந் தொழிற்சாலையதும்
எல்லாம் நமது" என்றார்
எழுந்து தடி எடுத்தார்
கத்தி எடுத்தார்
கடப்பாரையும் எடுத்தார்
யுத்தம் எனச் சென்றார்
யுகம் மாறும் என்றுரைத்தார்.
எங்கும் புயலும்
எரிமலையும் பொங்கி வரச்
சென்றவரைக் காணேன்.
செத்து மடிந்தாரோ?

வைத்ததுவோ ஐஞ்சு முட்டை
பொரித்ததுவோ நாலு குஞ்சு
நாலு குஞ்சும் போர் புரிய
நடந்து விட்டார் என்ன செய்வேன்
ஆன வரைக்கும்
அந்த மலைக் கப்பாலே
போனவரைக் காணேன்.
போனவரைக் காண்கிலனே.

ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.
---

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல்



நூல் அறிமுகம் - சு.குணேஸ்வரன்

கலாநிதி ஆ.கந்தையா ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார். இலங்கையில் இருந்தபோது கல்வி மற்றும் நிர்வாகம் சார்ந்த பல பதவிகளை வகித்தவர். தமிழ்மொழி, சமயம், சிறுவர் இலக்கியம், கவிதை, நாவல், கட்டுரை, ஆய்வு என பல துறைகளில் பங்களிப்புச் செய்திருக்கிறார். தமிழிலும் ஆங்கிலத்திலும் இதுவரை 45 நூல்கள் எழுதியிருக்கிறார். இவற்றுள் ஆஸ்திரேலியா சார்ந்து மட்டும் எழுதிய பத்துக்கு மேற்பட்ட நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன.
இந்த வகையில் 1998 இல் வெளிவந்த ‘ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல்’ என்ற நூல் பற்றிய அறிமுகமாக இக்குறிப்பு அமைகின்றது. இதில் மூன்று ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன.

1. ஆஸ்திரேலியாவில் தமிழர்களும் தமிழ் மொழியும்
2. ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல்
3. ஆஸ்திரேலியாவில் தமிழ்ப் பிள்ளைகளைத் தமிழ் பேசுவோராக உருவாக்கச் சிலஆலோசனைகள்

இந்தக் கட்டுரைகளில் பேசப்படும் விடயம் ஒன்றுதான். இருந்தாலும் படிப்படியாக தகவல்களில் கருத்துக்களில் முடிவுகளில் வளர்ச்சியைக் காணமுடிகின்றது. இந்நூலில் அவர் தந்துள்ள அறிமுகத்தின் ஊடாக இக்கட்டுரைகள் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காம் உலகத் தமிழாசிரியர் மாநாட்டுக்காக எழுதப்பட்டவை என்பது தெரியவருகிறது.

முக்கியமாக இன்று புலம்பெயர்ந்த நாட்டு பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்கும்போது தமிழ்மொழியும் பண்பாடும் முக்கிய பேசுபொருள்களாக உள்ளன.

தமிழ்மொழியைப் புலம்பெயர்ந்த தமிழர்களில் எத்தனை வீதமானோர் வீட்டுமொழியாகப் பேசுகின்றனர். தமிழ் கற்பித்தலில் நிறுவனங்கள் தனிநபர்களின் முயற்சிகள், பாடத்திட்டம், நூலகங்களில் தமிழ் நூல்கள், தமிழ்மொழியை பரவலாக்குவதில் ஊடகங்களின் பங்கு ஆகியன பற்றியெல்லாம் இந்நூலில் குறிப்பிடுகிறார்.

அவுஸ்திரேலியாவில் உள்ள 8 மாநிலங்களிலும் வாழ்கின்ற தமிழர்களின் 1996 வரையிலான குடித்தொகை மதிப்பீடுகளை ஆதாரமாகக் கொண்டு அவுஸ்திரேலியாவில் தமிழை வீட்டுமொழியாகப் பேசுவோர் பற்றிய கருத்துக்களை முன்வைத்துள்ளார். இந்நூல் வெளிவந்து பத்துவருடம் கடந்துவிட்ட நிலையில் இதில் இன்னமும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே அவை பற்றியும் எழுதவேண்டிய தேவையை இந்நூல் வலியுறுத்துகின்றது.

ஆனால் இக்கட்டுரைகளில் அவர் தனது ஆய்வு முடிவுகளாக முன்வைத்துள்ள கருத்துக்கள் மிக முக்கியமாக அமைந்துள்ளன. அவை இன்றும்கூட பொருந்தக் கூடியனவாகவே உள்ளன.

இந்நூலின் இறுதிக் கட்டுரையில் உள்ள ‘தமிழ்ப்பிள்ளைகளும் தமிழ் மொழியும்’ என்ற உபபிரிவில் அவர் குறிப்பிடுபவற்றைக் கவனத்திற் கொள்ளவேண்டும்.

1. ஆங்கிலம் தெரியாத பெற்றோர்களின் பிள்ளைகள் தமிழிலே பேசக்கூடியவர்களாக இருக்கின்றனர். அப்பிள்ளைகளின் ஆங்கில அறிவும் ஆற்றலும் ஏனைய பிள்ளைகளிலும் எவ்வகையிலும் குறைவானவை என்று கூறமுடியாது.
2. ஆங்கிலம் தெரிந்த பெற்றோர்களுள் பெரும்பாலானோரின் பிள்ளைகள் தமிழைப் பேச முடியாதவர்களாகக் காணப்படுகின்றனர். ஏனெனில் ஆங்கிலம் தெரிந்த பெற்றோர்களுள் பெரும்பாலானோர் வீட்டில் பிள்ளைகளுடன் ஆங்கிலத்திலேயே உரையாடுகின்றனர்.
3. பாட்டன் பாட்டியுடன் வாழும் பேரப்பிள்ளைகள் தமிழில் பேசக்கூடியவர்களாக இருக்கின்றனர். ஏனெனில் பேரப்பிள்ளைகளுடன் பாட்டனும் பாட்டியும் ஆங்கிலம் தெரிந்தாலும் தமிழிலேயே பேசுகின்றனர்.

இதனூடாக நூலாசிரியர் கண்டுகொண்டமை வீட்டுமொழியாக புலம்பெயர்ந்தவர்கள் தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்பதே. தமிழைப் பேசுவது முதற்கட்டமாக வெற்றிபெறும்போதுதான் அடுத்த நிலையில் தமிழை எழுத வாசிக்கக்கூடிய படிநிலைக்கு கொண்டு செல்ல முடியும். இல்லாவிட்டால் தனியே தமிழைப் பேசிக்கொண்டு அடுத்த தலைமுறையிலாவது நாங்கள் தமிழர் என்ற அடையாளத்தை என்றாலும் தாங்கி நிற்பர் என்கிறார்.

தமிழ் செம்மொழியாக உயர்ந்து நிற்கின்ற இவ்வேளையிலே எங்களின் தலைமுறைகள் தமிழைப் பேசமுடியாதவர்களாக நிற்கின்ற அவலநிலையை கொஞ்சமாவது போக்குவதற்கு இன்றைய தலைமுறையில் வாழ்பவர்கள் பொறுப்பான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை இந்நூல் வலியுறுத்துகின்றது.

நூல் - ஆஸ்திரேலியாவில் தமிழ் மொழி கற்பித்தல்
ஆசிரியர் - கலாநிதி ஆ.கந்தையா
வெளியீடு - நான்காவது உலகத் தமிழாசிரியர் மாநாடு,
சென்னை.
3-5 டிசெம்பர் 1998.
பக்கம் - 48

ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

மு. செல்லையா

விக்கிபீடியாவுக்காகத் தொகுத்தது -3


அல்வாயூர் கவிஞர் மு. செல்லையா (அக்டோபர் 7, 1906 - பெப்ரவரி 9, 1966) 1930-1960 காலகட்ட ஈழத்துக் கவிதைப் பரப்பில் தவிர்க்கமுடியாத ஒரு கவிஞர். இவரது 'வளர்பிறை, 'புதிய வண்டுவிடு தூது' ஆகிய கவிதைகள் மிகவும் குறிப்பிடத்தக்கன.


வாழ்க்கைச் சுருக்கம்

யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய்க் கிராமத்தில் 1906.10.07 இல் கவிஞர் மு. செல்லையா பிறந்தார். தமிழாசிரியராக, கவிஞராக, காந்தியவாதியாக, சமூக சீர்திருத்தவாதியாக பல்பரிமாண ஆற்றலுள்ளவராகத் திகழ்ந்தார். தேவரையாளிச் சூரன் சிஷ்யப் பரம்பரையின் முதல் மாணக்கராக இருந்துள்ளார். 1966.02.09 இல் மறைந்தார்.


இலக்கியப் பங்களிப்பு

கவிதை, கட்டுரை, இலக்கண இலக்கியம் ஆகியவற்றில் தனது ஆளுமையைச் செலுத்தியுள்ளார். ஈழகேசரி வெளிவந்த காலப்பகுதியில் 'அனுசுயா' என்ற புனைபெயரில் பல நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதி வந்துள்ளார். சிறுகதைகள் சிலவற்றையும் எழுதியுள்ளார்.

இவர் எழுதிய பக்திப் பாசுரங்கள் சிறுசிறு பிரசுரங்களாக வெளிவந்துள்ளன. இவர் தலைசிறந்த குழந்தைக் கவிஞர் என்பதை நிறுவுவதற்கு வளர்பிறை தொகுப்பில் உள்ள 'அம்மா வெளியே வா அம்மா' என்ற கவிதை மிகச்சிறந்த சான்றாக அமைந்துள்ளது.


வெளிவந்த நூல்கள்

வளர்பிறை (கவிதைத்தொகுப்பு) முதற்பதிப்பு 1952,இரண்டாம் பதிப்பு 2002 வெளியீடு - திருமதி சிவலோகநாயகி ஆறுமுகம்.

புதிய வண்டுவிடு தூது

பரீட்சைக்கேற்ற பாஷைப் பயிற்சி


பெற்ற கௌரவங்கள்

1952 ஆம் ஆண்டு வளர்பிறை கவிதை அரங்கேற்றப்பட்டபொழுது நவநீத கிருஷ்ண பாரதியார் 'கவிஞர்' என்ற பட்டத்தை செல்லையா அவர்களுக்குச் சூட்டினார்.

இரசிகமணி கனக செந்திநாதன் அவர்களால் 'கவிதை வானில் ஒரு வளர்பிறை' என நூல் நயப்புரையில் பாராட்டப்பெற்றார்.

இலங்கை வானொலி நடாத்திய குறுங்காவியப்போட்டியில் வண்டுவிடுதூது முதற்பரிசு தங்கப்பதக்கம் பெற்றது.

மல்லிகை இதழ் 1982 இல் செல்லையாவின் அட்டைப்படத்தோடு வெளியாகியது.

பகுப்புகள்: ஈழத்துக் கவிஞர்கள் | 1906 பிறப்புகள் | 1966 இறப்புகள்