ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

நவீன தேடல்கள் நிறைந்த யாழ் மண்ணின் பதிவுகள்


பத்தி

- சு. குணேஸ்வரன்

(குறிப்பு - பிரதேசம் சார்ந்த நவீன இலக்கிய வளர்ச்சி தொடர்பாக 2000 ற்குப் பின்னர் யாழ்மாவட்ட இலக்கியச் செயற்பாடுகள் தொடர்பாக ஒரு வினாவை மகுடம் ஆசிரியர் அனுப்பியிருந்தார். அதற்கு எழுதப்பட்ட சுருக்கமான பதிலே இங்கு தரப்படுகிறது.)


2000 ற்குப் பின்னரான காலம் அரசியல் ரீதியில் பல மாற்றங்களைக் கொண்டதாக இருக்கிறது. போரும் – சமாதானமும், போரும் - அழிவும் என மாறியகாலம். இக்காலங்களில் எழுந்த கலை இலக்கியங்களும் மக்களின் துன்பங்களையும் அதிலிருந்து மீளமுடியாத வாழ்க்கையையும் எடுத்துக் காட்டுவனவாகவே அமைந்திருந்தன. இவற்றை மிக நுண்மையாகத்தான் நோக்கவேண்டும். ஆனாலும் சில பொதுவான ஓட்டங்களை இங்கு சுட்டிக்காட்டலாம்.

கவிதையைப் பொறுத்தவரையில் குறிப்பிடத்தக்க முயற்சிகள் நடந்தேறியிருக்கின்றன. குறிப்பாக யாழ்ப்பாணம் ஏனைய பிரதேசங்களில் இருந்து முற்றாகத் துண்டிக்கப்பட்டு மூடுண்ட காலமாக இருந்தபோது வெளிவந்த படைப்புக்கள் மக்களின் இயல்புவாழ்க்கை அழிக்கப்பட்டதன் வெளிப்பாடுகளைப் புலப்படுத்துவனவாக அமைந்திருந்தன. இக்காலத்தில் ஆயுதம் தரித்த எல்லாத்தரப்பினரிடம் இருந்தும் மக்கள் பல்வேறுவிதமான வாழ்க்கை முரண்பாடுகளை எதிர்கொண்டனர். குறிப்பாக அக்காலத்தில் வெளிவந்த தீபச்செல்வன், சித்தாந்தன், துவாரகன், சத்தியபாலன் ஆகியோரின் கவிதைகளின் ஊடாக இந்த மூடுண்ட காலங்களை அறிந்துகொள்ளமுடியும். அப்போது வெளிவந்த மூன்றாவது மனிதன் சஞ்சிகையில் ஹரிகரசர்மா எழுதிய ‘யாழ்ப்பாண நாட்குறிப்புகள்’ என்ற புனைவுசாரா எழுத்துக்களையும் இக்கவிதைகளோடு இணைத்து நோக்கலாம்.

தொடர்ந்து போருக்குப் பின்னரான தொகுப்புக்களில் பா. அகிலன், நிலாந்தன், கருணாகரன், தானா விஷ்ணு, ந. மயூரரூபன், கி.பி நிதுன் ஆகியோரின் கவிதைகள் அதிக கவனத்தைக் கோருவனவாக அமைந்துள்ளன. இவை தவிர இக்காலத்தில் வெளிவந்த வேறு பல தொகுப்புக்களிலும் மக்களின் பல்வேறு நெருக்கடிகள் பதிவாகியுள்ளன. த. அஜந்தகுமார், யாத்திரீகன், செ.சுதர்சன், இ.சு முரளிதரன், ஐ. வரதராசன், கு. றஜீபன், பெரிய ஐங்கரன், கை. சரவணன் என்று பலரின் தொகுப்புக்களைக் கூறலாம். கவிஞர் சோ. பத்மநாதனும் தொடர்ச்சியாக இக்காலத்தில் எழுதிவந்துள்ளார்.

அண்மையில் வெளிவந்த ஓவியர் சனாதனனின் ‘The Incomplete Thombu’ முக்கியமான நூலாக அமைந்துள்ளது. ஓவியமும் புனைவும் வரலாறும் இணைந்த வகையில் தமிழர் வாழ் பிரதேசம் பற்றியும் அவர்களின் வாழ்வனுபவம் பற்றியும் பன்முக வாசிப்புக்குரிய தளத்தை ‘தோம்பு’ கொடுக்கிறது. போர்க்கால வாழ்வின் விளைவுகளைப் புதிய வடிவத்தில் தருகிறது. இது தமிழ்ப் படைப்புச் சூழலுக்குப் புதியது.

சிறுகதைத்துறையில் உருவப்பரிசோதனைகள் மூலம் இராகவன், மருதம் கேதீஸ், சித்தாந்தன் ஆகியோர் தருகின்ற கதைகள் கவனத்திற்குரியன. போருக்குப்பின்னரான சிறுகதைகளில் அதிக கவனத்தைக் கோருவனவாக யோ.கர்ணன், கருணைரவி ஆகியோரின் சிறுகதைத் தொகுப்புக்கள் வந்துள்ளன. இராஜேஸ்கண்ணன், சீனா உதயகுமார், தாட்சாயணி, சாரங்கா, விஸ்ணுவர்த்தனி, ஆகியோரின் முயற்சிகள் கவனத்திற்குரியன. இயல்வாணனின் சிறுகதைகளும் சிறுவர் கதைகள் அடங்கிய தொகுப்பு நூலும் இக்காலத்தில் வந்துள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளிவந்த ‘இங்கிருந்து’, ‘பசியடங்கா இருளிலிருந்து ஒன்பது கதைகள்’, ‘மண்ணின் மலர்கள்’ ஆகியன முக்கியமான தொகுப்புக்கள். இவைதவிர மூத்த படைப்பாளிகளான தெணியான், குப்பிழான் ஐ. சண்முகன், நந்தினி சேவியர், குந்தவை, யோகேஸ்வரி சிவப்பிரகாசம், சட்டநாதன், கே.ஆர் டேவிட், த. கலாமணி, அநாதரட்சகன், கொற்றை பி .கிருஸ்ணானந்தன், ஆகியோரின் சிறுகதைத் தொகுதிகளும் இக்காலகட்ட வாழ்வியலின் பல்வேறு நெருக்கடிகளை வெளிப்படுத்துகின்றன.


கவிதை சிறுகதைகளோடு ஒப்பிடுகின்றபோது நாவல் முயற்சி தேக்க நிலையிலேயே உள்ளது. இக்காலத்தில் செங்கை ஆழியானின் ‘போரே நீ போ’, ‘வானும் கனல் சொரியும்’ ‘மீண்டும் வருவேன்’, ‘ருத்ர தாண்டவம்’, தெணியானின் ‘தவறிப்போனவன் கதை’ கலையார்வனின் ‘உப்புக்காற்று’ ஆகியன வெளிவந்துள்ளன. வேறு முயற்சிகள் நடைபெற்றதாகத் தெரியவில்லை.

ஆய்வு நிலையில் பல்கலைக்கழகத்தைச் சார்ந்துதான் பலர் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நிகழ்த்திய ஆய்வரங்குகள், மற்றும் அரசு சார்ந்து பிரதேச ரீதியாக நடைபெற்ற ஆய்வரங்குகளும், முக்கியமானவை. தூண்டி இலக்கிய வட்டம் 2003 இல் ‘ஈழத்துத் தமிழ்க் கவிதை’ தொடர்பாக நிகழ்த்திய ஆய்வரங்கும் திருமறைக் கலாமன்றம் நிகழ்த்திய ஆய்வரங்கும் குறிப்பிடத்தக்கவை. ஆனால் அதிகமான ஆய்வரங்கக் கட்டுரைகள் தாமதமாகவே நூலுருப்பெறுவதனால் உரிய நேரத்தில் கவனத்தைப் பெறத் தவறிவிடுகின்றன.

விமர்சன வளர்ச்சி ஈழத்திலே தொடர்ந்தும் தேக்க நிலையில்தான் உள்ளது. எனினும் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் தொடர்ச்சியாக இத்துறையில் இயங்கி வருகின்ற அ. யேசுராசா, செ. யோகராசா ஆகியோர் முக்கியமானவர்கள். மேலும் கல்வியியல்துறைக்கு ஊடாக வருகின்ற சபா ஜெயராசாவின் பங்களிப்பும் முக்கியமானது. அண்மைக்காலத்தில் பா.அகிலன், க.அருந்தாகரன், ஆகியோர் பனுவல் இதழுக்கு ஊடாகவும் மானிடவியல் துறைசார் வாசிப்புக்களை நிகழ்த்தி வருவதும், இலக்கியம் மற்றும் அரசியற்தளத்தில் நிலாந்தனின் பங்களிப்பும் கவனத்திற்குரியன. யாழ். பல்கலைக்கழகம் சார்ந்து துறை ரீதியாக இயங்குபவர்கள் பலர். இவர்களில் ஈ. குமரன், கந்தையா சிறீகணேசன் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

புதிய தலைமுறையினர் பலர் இதழ்களுக்கு ஊடாக (கூடம், மறுபாதி, தவிர ,கலைமுகம், ஞானம், ஜீவநதி) இயங்குகின்றனர். இவை பற்றிய மதிப்பீடுகளுக்கு மேலும் காலமிருக்கிறது என்று எண்ணுகிறேன்.

யாழ்ப்பாணத்தில் எல்லாப் படைப்பாளிகளையும் ஒன்றிணைக்கக்கூடிய காத்திரமான இலக்கிய அமைப்பு என்று குறிப்பிடுவது கடினம். அரசியற்கட்சிகள் போலத்தான் இலக்கியக்காரர்களும் பிளவுண்டு இருக்கிறார்கள். முன்னர் இயங்கிய தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்திடமும் இந்தக் குறைபாடு இருந்தது. தவிர்க்கமுடியாமல் எல்லோரையும் இணைக்கும் நிகழ்வுகளெனில் அவை களியாட்டங்களாகக்தான் இருக்கவேண்டும். மிகப்பெரும் எடுப்பில் நிதியை இறைத்துச் செய்யப்படும் கலை இலக்கிய நிகழ்வுகள்கூட இறுதியில் ஒப்புக்காக நடைபெறுவனவாகத்தான் அமைகின்றன.

இந்த நிலையில் தவிர்க்கமுடியாமல் சிறிய சிறிய குழுக்களாக ஒருமித்த நிலையில் இயங்குகின்ற இலக்கிய அமைப்புக்களால்தான் சிறியளவிலாவது இலக்கிய முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லமுடிகிறது. அறிவோர்ஒன்றுகூடல், அவை, உயில்/
, இளங்கோ கழகம், இணுவில் இலக்கிய வட்டம், யாழ் இலக்கிய வட்டம், சமூக விஞ்ஞான படிப்பு வட்டம் ஆகியன தம்மளவில் சில காத்திரமான வேலைகளைச் செய்து வருகின்றன. இவற்றோடு பல்கலைக்கழக மட்டத்திலும் இதழ்கள் சார்ந்தும் பலர் செயற்படுகிறார்கள். சுன்னாகம் பொதுநூலகத்தின் ஊடாக பல காத்திரமான முயற்சிகள் முன்மாதிரியாக முன்னெடுத்துச் செல்லப்படுவதும் கவனத்திற் கொள்ளத்தக்கதாக அமைந்துள்ளது.


திருமறைக்கலாமன்றத்தின் நாடக முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இக்காலத்தில் அவர்கள் ஆற்றுகை செய்த பல நாடகங்கள் உள்ளன. அவற்றுள் ‘அற்றைத்திங்கள்’ முக்கியமானது. மேலும் ஈழத்து இசை நாடக வரலாற்றில் புதிய முயற்சியாக அண்மையில் மேடையேறிய குழந்தை சண்முகலிங்கத்தின் ‘கண்டனள் சீதையை’, செயல்திறன் அரங்க இயக்கத்தினரின் செயற்பாடுகள், மற்றும் தே. தேவானந் முயற்சியில் அண்மையில் வெளியரங்கில் நிகழ்த்தப்பட்ட நாடகங்கள் முக்கியமானவை. இவை தவிர இசை நாடக விழாக்கள், பாடசாலை மட்டங்களில் நிகழ்த்தப்பட்ட காத்திரமான நாடகங்கள் பல உள்ளன. இவற்றுக்கு அப்பால் கிராமங்களில் இன்னமும் உயிர்த்துடிப்போடு இருக்கின்ற பாரம்பரிய கூத்து மரபில் இருந்து வந்த கூத்துக்கலைகள் குறிப்பாக வடமராட்சியில் அல்வாய், மாதனை, தும்பளை, குடத்தனை ஆகிய பிரதேசங்களும்; வலிகாமத்தில் வட்டுக்கோட்டையிலும் யாழில் பாசையூரிலும் தொடர்ச்சியாக கூத்துக்கள் ஆடப்பட்டு வருகின்றன. இவை உரியவகையில் ஆவணப்படுத்தவேண்டியவையாக உள்ளன.

இதழியல் முயற்சிகள் முன்னர்போல தொடர்கின்றன. ஆனால் அவர்களின் முயற்சிகளுக்கு ஏற்ப பலன் கிடைக்கின்றனவா என்பது இன்னமும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. இதழ்களை வெளியிட்டுவிட்டு டொமினிக் ஜீவா கூறுவதுபோல தலையிற் சுமந்து விற்கவேண்டிய நிலையிலேயே இன்றும் ஈழத்து இதழியற்சூழல் உள்ளது. சமூகத்தின் பல மட்டங்களையும் சகல நூலகங்களையும் அவை சென்றடைகின்றனவா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் பல இதழ்கள் வந்து நின்றுவிட்டன. குறிப்பாக கவிதை, தெரிதல், கூத்தரங்கம், அம்பலம், தூண்டி, புதியதரிசனம், புலரி ஆகிய இதழ்கள் அவற்றுள் முக்கியமானவை. இன்று வெளிவருவனவற்றுள் கலைமுகம், தவிர, மறுபாதி, ஜீவநதி, தாயகம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இன்னமும் பல இதழ்கள் வருகின்றன.

கொழும்பிலிருந்து வெளிவருகின்ற ஞானம், மல்லிகை, கலைக்கேசரி ஆகியவற்றில் யாழ்ப்பாணத்துப் படைப்பாளிகளின் பங்களிப்பு கவனத்திற்குரியது. குறிப்பாக கலைக்கேசரியில் வருகின்ற தமிழ்ப்பண்பாடு, வரலாறு தொடர்பான கட்டுரைகள் முக்கியமானவை. பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா எழுதி வருகின்ற “யாழ்ப்பாணத்து வாழ்வியல்” தொடர்கட்டுரையும், பேராசிரியர் எஸ். புஷ்பரட்ணம் வரலாறு, தொல்லியல் தொடர்பாக எழுதிவருகின்ற கட்டுரைகளும், பத்திரிகைகளில் கோகுலராகவன், வேதநாயகம் தபேந்திரன் ஆகியோர் யாழ்ப்பாணப் பண்பாட்டினை புனைவுசாரா வகையில் ஆவணப்படுத்தி வருகின்றமையும் இக்காலத்தில் கவனத்திற்கொள்ளத்தக்கனவாக உள்ளன.
ஆனால் ஈழத்து இதழியற் சூழலில் மறுமலர்ச்சி, அலை, மூன்றாவது மனிதன் போன்ற இதழ்கள் ஏற்படுத்திய பாதிப்பினை தற்போது வெளிவருகின்ற இவ்விதழ்கள் ஏற்படுத்தியுள்ளனவா என்பதையும் நாங்கள் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.

எனவே 2000 ற்குப் பின்னரான யாழ்ப்பாணத்து இலக்கிய முயற்சிகளில் ஒவ்வொரு இலக்கிய வடிவத்திலும் கவனத்திற்குட்படுத்த வேண்டியவற்றை இங்கு சுட்டிக்காட்டியுள்ளேன். கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய இலக்கிய வடிவங்கள் ஏற்கெனவே நடைபெற்ற ஆய்வரங்குகளில் கவனப்படுத்தப்பட்டுள்ளன. ஏனையவையும் விரிவான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியனவாகும்.

நன்றி :- மகுடம், இதழ் - 5,ஜனவரி – மார்ச் 2013.


மேலதிக இணைப்பு -

இங்கு குறிப்பிட்டவற்றுள் சிறுகதைப்பகுதியில் குந்தவை தொடர்ச்சியாக எழுதிவருகிறார் என்பதனால் அவரது பெயர் சிறுகதை தொடர்பான பகுதியில் கவனத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கவிதைகளில் த. ஜெயசீலன், சிறீபிரசாந்தன் ஆகியோரும் கவனத்திற் கொள்ளப்படவேண்டியவர்கள்.

இலக்கிய அமைப்புக்களில் 'யாழ் இலக்கியக் குவியம்' அண்மைக்காலத்தில் புதிய இளம் படைப்பாளிகளை ஊக்குவித்து வருகிறது.

ஆய்வு மற்றும் விமர்சனம் தொடர்பாக புதிய தலைமுறையினர் மிக ஈடுபாட்டுடன் இயங்கி வருகிறார்கள். இவர்கள் பற்றி விரிவாக மேலே குறிப்பிடவில்லை. குறிப்பாக இதழ்களுக்கு ஊடாக இவர்களின் வருகை கவனத்திற்கொள்ளவேண்டும். கட்டுரையாசியர் உட்பட சி. ரமேஸ், செ. சுதர்சன், சிறீபிரசாந்தன், இ. இராஜேஸ்கண்ணன், சி. விமலன், த. அஜந்தகுமார் ஆகியோர் அண்மைக்காலத்தில் தீவிரமாக ஆர்வத்துடன் செயற்பட்டு வருகிறார்கள்.


திங்கள், 24 ஜூன், 2013

"கெருடாவில் - ஊர்ப்பெயர் வரலாறு" - ஒரு குறிப்பு

கெருடாவில் மாயவர் ஆலயம்

- சு. குணேஸ்வரன்

            ‘கெருட + ஆவில் = கெருடாவில்’ என அமையும். ‘கெருடன்’ ‘கருடன்’ என்பன தமிழ் அகராதிப்படி ஒரே அர்த்தத்தைக் குறிப்பனவாகும்.     மேலும் நோக்கினால் ‘கெருடன்’ என்ற பறவையை விஷ்ணுவுக்குரியதாகக் கொள்வர். ‘ஆ’ என்பது பசு. ‘வில்’ என்பது வில் வளைவிலான குளம், அரைவட்டம், சிறுகுளம், ஆகியவற்றைக் குறிக்கும். அதாவது ‘சிறிய குளம்’ எனக் கருதலாம். ‘வில்’ என்ற கருவி எவ்வாறு அரைவட்டமாக வளைத்து எய்யப்படுகிறதோ அதேபோல அரைவட்ட வடிவ சிறிய நீர் நிலைகளைக் குறிப்பிட ‘வில்’ என்ற சொல் பயன்பாட்டில் இருந்துள்ளது. இவை பழந்தமிழ் இலக்கியங்கள்  ஊடாக நாம் அறியும் செய்திகளாகும். 

            கெருடாவில் பிரதேசம் குறிப்பாக ஆரம்பத்தில் ஈறள் காடுகளைக் (நெருக்கமாக இருந்த காடு) கொண்ட பிரதேசமாக அமைந்திருந்ததால் கருடன் என்ற பறவையினம் அதிகம் இருந்திருக்கலாம். (அதிகமான ஊர்ப்பெயர்கள் உயிரினங்களின் பெயர்களுடன் இணைத்து காரணப்பெயராக வழங்கப்பட்டிருக்கின்றன. உதாரணம் :- கெருடாவில் - (கெருடன்), கொக்குவில் - (கொக்கு), மந்துவில் - (மந்தி), நவிண்டில் (நண்டு) போன்ற ஊர்ப்பெயர்களை ஞாபகப்படுத்தலாம்.) அதேபோல் அங்கிருந்த நீர் நிலையின் காரணத்தால் ‘வில்’ என்பதும்  வந்திருக்கமுடியும் என்று கருதலாம்.

     மாயவர் கோவிலுக்கு அருகில் உள்ள கெருடாவில் அம்மன் கோவிலிலிருந்து கெருடாவில் பாடசாலைக்குச் செல்லும் கிழக்கு வீதியில் அமைந்துள்ள பிள்ளையார் கோவிலுக்கும் இடையில் தெற்குப்புறமாக முன்னர் ஒரு சிறிய குளம் இருந்ததாக மூதாதையர் குறிப்பிடுகின்றனர். அக்குளம் இருந்த இடம் ‘பால்மோட்டை’ என தொட்டில் கந்தசாமி கோவில் ஆலய பாலசுப்பிரமணியக் குருக்கள் குறிப்பிடுகிறார்.

    தற்காலத்தில் மழைபெய்தபின்னர் அதனை அண்டிய பிரதேசத்தில் நீர் நிரம்பியிருத்தலையும் கண்டுகொள்ளமுடியும். அதுமட்டுமல்லாமல் கோட்டைச்சீமா அம்மன் கோயிலின் கிழக்குப்புறத்தின் ஊடாகவும், கெருடாவில் மாயவர் கோவிலுக்கு தெற்குப்புறமாகவும், வடக்குத் தெற்கு பாடசாலை வீதிவழியாக வரும் நீரும் மழைக்காலத்தில் இவ்விடத்தில் தேங்குவதனை அவதானிக்கலாம். குளம் இருந்ததாகக் கருதப்படும் இடத்தில் இப்பொழுதும் கொண்டல் மரங்கள் காணப்படுகின்றன. 

            இப்பகுதிக்கு அருகில் பிராமண வகுப்பினர் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வாழ்விடத்திற்குரிய காணிகளின் பெயர்களை அல்லது தோம்புகளைத் தேடுவதன் ஊடாகவும் இவ்விடத்தில் இருந்த குளமும் அது தொடர்பான காரணப்பெயரும் மேலும் உறுதி செய்வதற்கு வாய்ப்பிருக்கும்.

            இந்தப் பிரதேச நிலவமைப்பை அடிப்படையாகக் கொண்டு மேலும் சில ஆதாரங்களை சுட்டிக்காட்டலாம். மயிலியதனை, என்பது ‘மயிலம்’ என்னும் மரத்தின் பெயரால் உருவானது. கேணித்தோட்டம் என்று இன்று வழங்கப்படும் பெயர் ‘நீர்நிலை’ மற்றும் ‘சிறு குளம்’ என அர்த்தப்படும்.  மற்றும் வயல் சார்ந்த மருதநிலத்தின் ஊர்ப்பெயர்களாக ‘வில்’, ‘பள்ளி’  ஆகியனவும் வழங்கப்படுகின்றன. அதனால்தான் பள்ளிவாசல் என்பது - பள்ளவாசல் என அழைக்கப்பட்டிருக்கலாம். (நீர் தேங்கக்கூடிய பள்ளமான நிலப்பிரதேசத்தைக் கொண்டதனாலும் இப்பெயர் வழங்கப்பட்டிருக்கலாம்), இதன் அடிப்படையிலேயே ‘வில்’ என்பதும் கெருடாவிலைப் பொறுத்தவரையில் சிறிய குளத்தைக் குறிப்பிடவே வழங்கங்கப்பட்டிருக்கிறது என்ற முடிவுக்கு வரமுடிகிறது.

(கெருடாவில் மாயவர் ஆலயத்தின் தோற்றத்திற்கு வித்திட்டவரும் ஆலய குருவாக விளங்கியவருமாகிய திரு க. செல்லன் (மாயவர் ஐயா) அவர்களின் மறைவின் 31 ஆம் நினைவு மலருக்கு எழுதப்பட்ட கட்டுரையில் இருந்து ஒரு பகுதி)

செவ்வாய், 26 மார்ச், 2013

இலக்கியத் திருடர்களுக்கு யார் தண்டனை கொடுப்பது?


- சு. குணேஸ்வரன்

திருட்டுக்கள் பலவிதம். அதில் பேசப்படாத திருட்டு 'அறிவுத்திருட்டு'. அதில் ஒரு பகுதி 'இலக்கியத்திருட்டு'. ஒருவர் மிகக்கடினப்பட்டு தனது நேரம்,பொருள், உழைப்பு எல்லாவற்றையும் செலவளித்துத்தான் ஏதோ எழுதுகிறார். அது தகுதியோ இல்லையோஅவரவரின் சொந்தப் படைப்பாக அல்லது முயற்சியாக அமையும்போது அதற்கு மதிப்புக் கொடுத்தான் ஆகவேண்டும். இதுதான் நீதியும்கூட. 

எழுதுபவை எல்லாம் சமூகம் பயன்படுத்திக் கொள்ளத்தான். அதைத்தான் எங்கள் முன்னோர் செய்திருக்கிறார்கள். இன்னும் மற்றவர்களும் செய்கிறார்கள். ஆனால் முன்னரே எழுதியவற்றை முறையாக எடுத்தாளுபவர்களைப் பற்றி யாரும் குறைசொல்லப்போவதில்லை. 

ஒருவர் எழுதிய கட்டுரையின் தொடரை அல்லது பகுதியை உரிய மேற்கோளுடன் பயன்படுத்தவேண்டும்.  இதுதான் இலக்கிய தர்மமும்கூட. (முழுமையாகவே களவெடுத்து பெயர் வாங்குபவர்களும் இருக்கிறார்கள்) ஆனால் எங்கள் திருட்டு ஜாம்பவான்கள் மிக இலகுவாக குழந்தையின் கையில் இருந்து காகம் வடையைத் தட்டிப் பறிப்பதுபோல தட்டிப்பறித்துச் செல்கிறார்கள்.

சரி எழுதினவர் பெயரைப் போடத் துணிச்சல் இல்லாவிட்டாலும்  எங்கே இருந்து இந்தப் பகுதியை எடுத்தாய் என்றாவது போடலாம் அல்லவா? 

அவரவர் தண்டனை கொடுப்பதற்கு - கசையடி கொடுக்கிறார்கள், சிறையில் தள்ளுகிறார்கள், தண்டப்பணம் வாங்குகிறார்கள்,  தலையை வெட்டுகிறார்கள், கொடும்பாவி எரிக்கிறார்கள்,  கோஷம் போடுகிறார்கள்.

இலக்கியத் திருடர்களுக்கு நாங்கள் என்னதான் தண்டனை கொடுப்பதாம்?