வியாழன், 22 ஜனவரி, 2015

நந்தினி சேவியர் படைப்புகள்


நூல் அறிமுகம்

- சு. குணேஸ்வரன்
விடியல் பதிப்பகம் நந்தினி சேவியரின் எழுத்துக்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறது. நந்தினி சேவியர் இதுவரை எழுதிய படைப்புக்களில் சிறுகதைகள், நேர்காணல்கள், கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள், நூல்களுக்கு எழுதிய முன்னுரைகள் மற்றும் நினைவுக் குறிப்புக்கள் உள்ளடங்கலாக மிகக் காத்திரமான ஒரு தொகுப்பைத் தந்திருக்கும் விடியலுக்கு ஒரு பாராட்டு சொல்லியே ஆகவேண்டும்.

1969 முதல் 2004 வரை நந்தினி சேவியர் எழுதிய 16 சிறுகதைகளும் ‘அயற்கிராமத்தைச் சேர்ந்தவர்கள்’, ‘நெல்லிமரப் பள்ளிக்கூடம்’ ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளாக ஏற்கனவே நூலுருப் பெற்றுள்ளன. அக்கதைகள் இத்தொகுப்பில் உள்ளடங்கியுள்ளமை பிரதான அம்சமாகும்.
இதற்கு அடுத்ததாக ‘தமிழ் இனி’ மாநாட்டில் வாசிக்கப்பட்ட “கடந்த நூற்றாண்டில் மார்க்சிய இலக்கியம்” என்ற கட்டுரையுடன் ‘மாலைமுரசு’ பத்திரிகையில் 2012 ஆம் ஆண்டு தொடராக எழுதிய 12 கட்டுரைகளும் உள்ளடங்கியுள்ளன. குறிப்பாக டானியல் அன்ரனி, வ.அ இராசரத்தினம், சசி கிருஷ்ணமூர்த்தி, சி. பற்குணம் உள்ளிட்டோர் பற்றிய கட்டுரைகளும் இப்பகுதியில் உள்ளன.

பத்தி எழுத்துக்கள் என்ற மற்றொரு பிரிவில் குறும்படங்கள், திரைப்படங்கள் பற்றியும், ஏனைய படைப்பாளிகளின் சில தொகுப்புக்கள் பற்றியும், இலக்கியச் சர்ச்சைகள் பற்றியும் எழுதியவை உள்ளன.

இத்தொகுப்பின் மிக முக்கியமான இன்னொரு பகுதியாக நந்தினி சேவியரின் அகத்தையும் புறத்தையும் காட்டும் நேர்காணல்கள் உள்ளன. ‘தலித்’, ‘சுட்டும் விழி’ ஆகிய இதழ்கள் உட்பட இன்பராசா நிகழ்த்திய மற்றொரு நேர்காணலும் இத்தொகுப்பில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இவை தவிர கௌரிபாலன், முகைதீன் சாலி, லெனின் மதிவானம், கோபாலபிள்ளை, ஷெல்லிதாசன், இரத்தினவேலோன் ஆகியோரின் நூல்களுக்கு நந்தினி சேவியர் எழுதிய முன்னுரை மற்றும் பின்னுரைக் குறிப்புக்களும் மற்றொரு பகுதியாக இணைக்கப்பட்டுள்ளன.

நந்தினி சேவியரின் எழுத்துக்கள் பற்றி இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் முகமாக அவரின் வெளிவந்த இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களையும் ஆதாரமாக வைத்து அவ்வப்போது இ. முருகையன், முஹசீன், முகைதீன் சாலி, லெனின் மதிவானம், இதயராசன், இரண்டாம் விசுவாமித்திரன், அநாதரட்சகன், முல்லை வீரக்குட்டி, தேவி பரமலிங்கம், மேமன்கவி, செ. யோகராசா, செல்லத்துரை சுதர்சன் ஆகியோர் எழுதிய 12 பதிவுகள் அவரின் எழுத்துக்கள் பற்றி அசைபோடுவதற்கு ஏற்ற மதிப்பீடுகளாக அமைந்துள்ளன.

நூலின் இறுதியில் நந்தினி சேவியர் எழுதியவற்றுள்ள தொலைத்துவிட்ட சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள், கட்டுரைத்தொடர் ஆகிய தகவல்கள் அடங்கிய பட்டியலை வாசித்தபோது நெஞ்சம் பதைத்தது. 1966 முதல் 1974 வரை எழுதியவற்றுள் தவறிப்போன 14 சிறுகதைகளையும், ஈழநாடு இதழில் 1974 இல் 56 வாரம் தொடராக வெளிவந்த ‘மேகங்கள்’ என்ற நாவலையும் அதே ஆண்டு எம்.டி குணசேன நிறுவனக் காரியாலயத்தில் சிந்தாமணி பத்திரிகைக்கென கொடுத்த ‘கடற்கரையில் தென்னை மரங்கள் நிற்கின்றன’ என்ற நாவலையும் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்க 50 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் தங்கப் பதக்கம் பெற்ற “ஒரு வயது போன மனிதரின் வாரிசுகள்” உட்பட ‘தெளிவு பிறக்கிறது’ குறுநாவலையும் (பூம்பொழில் 1971), களஆய்வுக் கட்டுரையினையும் (ஈழமுரசு 1987) இந்த நூற்றாண்டிலேயே தொலைத்துவிட்டு நிற்கிறார் நந்தினிசேவியர். போர்ச்சூழல் காவுகொண்ட மனிதர்களின் கணக்கிலே இந்தப் படைப்புக்களின் கணக்குகளும் உள்ளடங்கி விட்டன. இன்றைய இலத்திரனியற்சூழலில் இவற்றில் சிலவற்றையாவது எங்கோ ஒரு மூலையில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற பேரவா எனக்கும் உண்டு.

ஈழத்துப் புனைகதை இலக்கியத்தில் தனித்துவமான ஆளுமைகளில் ஒருவராகத் திகழ்கின்ற நந்தினி சேவியரின் அரிதான படைப்புக்களை தமிழ்ச்சூழலில் பரவலாக்கும் பொருட்டு ஆவணப்படுத்தி ஒரு காத்திரமான நூலாகக் கொண்டு வந்த விடியல் பதிப்பகத்திற்கு நன்றி சொல்ல ஈழத்துப் படைப்புலகம் கடமைப்பட்டுள்ளது.