ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல்நூல் அறிமுகம் - சு.குணேஸ்வரன்

கலாநிதி ஆ.கந்தையா ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார். இலங்கையில் இருந்தபோது கல்வி மற்றும் நிர்வாகம் சார்ந்த பல பதவிகளை வகித்தவர். தமிழ்மொழி, சமயம், சிறுவர் இலக்கியம், கவிதை, நாவல், கட்டுரை, ஆய்வு என பல துறைகளில் பங்களிப்புச் செய்திருக்கிறார். தமிழிலும் ஆங்கிலத்திலும் இதுவரை 45 நூல்கள் எழுதியிருக்கிறார். இவற்றுள் ஆஸ்திரேலியா சார்ந்து மட்டும் எழுதிய பத்துக்கு மேற்பட்ட நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன.
இந்த வகையில் 1998 இல் வெளிவந்த ‘ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல்’ என்ற நூல் பற்றிய அறிமுகமாக இக்குறிப்பு அமைகின்றது. இதில் மூன்று ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன.

1. ஆஸ்திரேலியாவில் தமிழர்களும் தமிழ் மொழியும்
2. ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல்
3. ஆஸ்திரேலியாவில் தமிழ்ப் பிள்ளைகளைத் தமிழ் பேசுவோராக உருவாக்கச் சிலஆலோசனைகள்

இந்தக் கட்டுரைகளில் பேசப்படும் விடயம் ஒன்றுதான். இருந்தாலும் படிப்படியாக தகவல்களில் கருத்துக்களில் முடிவுகளில் வளர்ச்சியைக் காணமுடிகின்றது. இந்நூலில் அவர் தந்துள்ள அறிமுகத்தின் ஊடாக இக்கட்டுரைகள் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காம் உலகத் தமிழாசிரியர் மாநாட்டுக்காக எழுதப்பட்டவை என்பது தெரியவருகிறது.

முக்கியமாக இன்று புலம்பெயர்ந்த நாட்டு பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்கும்போது தமிழ்மொழியும் பண்பாடும் முக்கிய பேசுபொருள்களாக உள்ளன.

தமிழ்மொழியைப் புலம்பெயர்ந்த தமிழர்களில் எத்தனை வீதமானோர் வீட்டுமொழியாகப் பேசுகின்றனர். தமிழ் கற்பித்தலில் நிறுவனங்கள் தனிநபர்களின் முயற்சிகள், பாடத்திட்டம், நூலகங்களில் தமிழ் நூல்கள், தமிழ்மொழியை பரவலாக்குவதில் ஊடகங்களின் பங்கு ஆகியன பற்றியெல்லாம் இந்நூலில் குறிப்பிடுகிறார்.

அவுஸ்திரேலியாவில் உள்ள 8 மாநிலங்களிலும் வாழ்கின்ற தமிழர்களின் 1996 வரையிலான குடித்தொகை மதிப்பீடுகளை ஆதாரமாகக் கொண்டு அவுஸ்திரேலியாவில் தமிழை வீட்டுமொழியாகப் பேசுவோர் பற்றிய கருத்துக்களை முன்வைத்துள்ளார். இந்நூல் வெளிவந்து பத்துவருடம் கடந்துவிட்ட நிலையில் இதில் இன்னமும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே அவை பற்றியும் எழுதவேண்டிய தேவையை இந்நூல் வலியுறுத்துகின்றது.

ஆனால் இக்கட்டுரைகளில் அவர் தனது ஆய்வு முடிவுகளாக முன்வைத்துள்ள கருத்துக்கள் மிக முக்கியமாக அமைந்துள்ளன. அவை இன்றும்கூட பொருந்தக் கூடியனவாகவே உள்ளன.

இந்நூலின் இறுதிக் கட்டுரையில் உள்ள ‘தமிழ்ப்பிள்ளைகளும் தமிழ் மொழியும்’ என்ற உபபிரிவில் அவர் குறிப்பிடுபவற்றைக் கவனத்திற் கொள்ளவேண்டும்.

1. ஆங்கிலம் தெரியாத பெற்றோர்களின் பிள்ளைகள் தமிழிலே பேசக்கூடியவர்களாக இருக்கின்றனர். அப்பிள்ளைகளின் ஆங்கில அறிவும் ஆற்றலும் ஏனைய பிள்ளைகளிலும் எவ்வகையிலும் குறைவானவை என்று கூறமுடியாது.
2. ஆங்கிலம் தெரிந்த பெற்றோர்களுள் பெரும்பாலானோரின் பிள்ளைகள் தமிழைப் பேச முடியாதவர்களாகக் காணப்படுகின்றனர். ஏனெனில் ஆங்கிலம் தெரிந்த பெற்றோர்களுள் பெரும்பாலானோர் வீட்டில் பிள்ளைகளுடன் ஆங்கிலத்திலேயே உரையாடுகின்றனர்.
3. பாட்டன் பாட்டியுடன் வாழும் பேரப்பிள்ளைகள் தமிழில் பேசக்கூடியவர்களாக இருக்கின்றனர். ஏனெனில் பேரப்பிள்ளைகளுடன் பாட்டனும் பாட்டியும் ஆங்கிலம் தெரிந்தாலும் தமிழிலேயே பேசுகின்றனர்.

இதனூடாக நூலாசிரியர் கண்டுகொண்டமை வீட்டுமொழியாக புலம்பெயர்ந்தவர்கள் தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்பதே. தமிழைப் பேசுவது முதற்கட்டமாக வெற்றிபெறும்போதுதான் அடுத்த நிலையில் தமிழை எழுத வாசிக்கக்கூடிய படிநிலைக்கு கொண்டு செல்ல முடியும். இல்லாவிட்டால் தனியே தமிழைப் பேசிக்கொண்டு அடுத்த தலைமுறையிலாவது நாங்கள் தமிழர் என்ற அடையாளத்தை என்றாலும் தாங்கி நிற்பர் என்கிறார்.

தமிழ் செம்மொழியாக உயர்ந்து நிற்கின்ற இவ்வேளையிலே எங்களின் தலைமுறைகள் தமிழைப் பேசமுடியாதவர்களாக நிற்கின்ற அவலநிலையை கொஞ்சமாவது போக்குவதற்கு இன்றைய தலைமுறையில் வாழ்பவர்கள் பொறுப்பான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை இந்நூல் வலியுறுத்துகின்றது.

நூல் - ஆஸ்திரேலியாவில் தமிழ் மொழி கற்பித்தல்
ஆசிரியர் - கலாநிதி ஆ.கந்தையா
வெளியீடு - நான்காவது உலகத் தமிழாசிரியர் மாநாடு,
சென்னை.
3-5 டிசெம்பர் 1998.
பக்கம் - 48

ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

மு. செல்லையா

விக்கிபீடியாவுக்காகத் தொகுத்தது -3


அல்வாயூர் கவிஞர் மு. செல்லையா (அக்டோபர் 7, 1906 - பெப்ரவரி 9, 1966) 1930-1960 காலகட்ட ஈழத்துக் கவிதைப் பரப்பில் தவிர்க்கமுடியாத ஒரு கவிஞர். இவரது 'வளர்பிறை, 'புதிய வண்டுவிடு தூது' ஆகிய கவிதைகள் மிகவும் குறிப்பிடத்தக்கன.


வாழ்க்கைச் சுருக்கம்

யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய்க் கிராமத்தில் 1906.10.07 இல் கவிஞர் மு. செல்லையா பிறந்தார். தமிழாசிரியராக, கவிஞராக, காந்தியவாதியாக, சமூக சீர்திருத்தவாதியாக பல்பரிமாண ஆற்றலுள்ளவராகத் திகழ்ந்தார். தேவரையாளிச் சூரன் சிஷ்யப் பரம்பரையின் முதல் மாணக்கராக இருந்துள்ளார். 1966.02.09 இல் மறைந்தார்.


இலக்கியப் பங்களிப்பு

கவிதை, கட்டுரை, இலக்கண இலக்கியம் ஆகியவற்றில் தனது ஆளுமையைச் செலுத்தியுள்ளார். ஈழகேசரி வெளிவந்த காலப்பகுதியில் 'அனுசுயா' என்ற புனைபெயரில் பல நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதி வந்துள்ளார். சிறுகதைகள் சிலவற்றையும் எழுதியுள்ளார்.

இவர் எழுதிய பக்திப் பாசுரங்கள் சிறுசிறு பிரசுரங்களாக வெளிவந்துள்ளன. இவர் தலைசிறந்த குழந்தைக் கவிஞர் என்பதை நிறுவுவதற்கு வளர்பிறை தொகுப்பில் உள்ள 'அம்மா வெளியே வா அம்மா' என்ற கவிதை மிகச்சிறந்த சான்றாக அமைந்துள்ளது.


வெளிவந்த நூல்கள்

வளர்பிறை (கவிதைத்தொகுப்பு) முதற்பதிப்பு 1952,இரண்டாம் பதிப்பு 2002 வெளியீடு - திருமதி சிவலோகநாயகி ஆறுமுகம்.

புதிய வண்டுவிடு தூது

பரீட்சைக்கேற்ற பாஷைப் பயிற்சி


பெற்ற கௌரவங்கள்

1952 ஆம் ஆண்டு வளர்பிறை கவிதை அரங்கேற்றப்பட்டபொழுது நவநீத கிருஷ்ண பாரதியார் 'கவிஞர்' என்ற பட்டத்தை செல்லையா அவர்களுக்குச் சூட்டினார்.

இரசிகமணி கனக செந்திநாதன் அவர்களால் 'கவிதை வானில் ஒரு வளர்பிறை' என நூல் நயப்புரையில் பாராட்டப்பெற்றார்.

இலங்கை வானொலி நடாத்திய குறுங்காவியப்போட்டியில் வண்டுவிடுதூது முதற்பரிசு தங்கப்பதக்கம் பெற்றது.

மல்லிகை இதழ் 1982 இல் செல்லையாவின் அட்டைப்படத்தோடு வெளியாகியது.

பகுப்புகள்: ஈழத்துக் கவிஞர்கள் | 1906 பிறப்புகள் | 1966 இறப்புகள்

மு. செ விவேகானந்தன்

விக்கிபீடியாவுக்காகத் தொகுத்தது -2


மு. செ விவேகானந்தன் (ஜனவரி 10, 1943- ஜூன் 7, 1999) ஈழத்துக் கலைஞர்களில் ஒருவர். கவிஞர், பாடகர், மெட்டமைப்பாளர், நடிகர், நெறியாளர் என அறியப்பட்டவர். 1988 ஆம் ஆண்டு இலங்கை ரூபவாகினியில் ஒலிபரப்பாகிய காத்தவராயன் சிந்துநடைக்கூத்தும் ‘அழகுநிலா வானத்திலே’ என்ற மெல்லிசைப் பாடலும் இவரை ஒரு சிறந்த கலைஞராக இன்றும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.


வாழ்க்கை வரலாறு

மு.செ விவேகானந்தன் இலங்கை யாழ்ப்பாணம் அல்வாய் பிறப்பிடமாகக் கொண்டவர். தந்தை மு. செல்லையா, தாய் நாகமுத்து. கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரியில் ஆரம்பக்கல்வியையும், யாழ் பரமேஸ்வராக் கல்லூரியில் இடைநிலைக்கல்வியையும் உயர்கல்வியையும் பெற்றார். தந்தையார் மு. செல்லையா மறைவினால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டிருந்த இசைப் பட்டப்படிப்பைத் தொடரமுடியாது இடைநிறுத்தினார்.

கலைப்பணி
1.
நாடகம்

பத்து வயதில் லோகிதாசனாக பாத்திரமேற்று நடித்ததில் இருந்து இவரது கலைவாழ்வு ஆரம்பமானது. கலைப்போதனாசிரியர் மு.பொன்னையா குருவாகவும் அண்ணாவியாராகவும் அமைந்தார்.

அரிச்சந்திரமயான காண்டம், காத்தவராயன், நந்தனார், சத்தியவான் சாவித்திரி, நக்கீரர், பூதத்தம்பி, அசுவத்தாமன் ஆகிய இசைநாடகங்களிலும்; சகோதர பாசம், இதயத்துக்கு இதயம், ஆகிய சமூக நாடகங்களிலும்; வேடன், கண்ணப்பர், மார்க்கண்டேயர் ,ஆகிய பாத்திரங்களேற்று புராண நாடகங்களிலும் நடித்துள்ளார். நடிகமணி வைரமுத்துவுடன் பூதத்தம்பியாகவும், பக்தநந்தனாரில் நந்தனாராகவும் நடித்தார்.

பிரதேச ஆலயங்களிலும் நிகழ்வுகளிலும் இசைக்கச்சேரிகள் நிகழ்த்தியுள்ளார்.
போர்க்காலச் சூழ்நிலையில் முல்லைத்தீவில் குடும்பத்துடன் இடம்பெயர்ந்து வாழ்ந்தபோதும் வன்னியிலும் தனது கலைப்பணியைத் தொடர்ந்துள்ளார். அங்கு புதுக்குடியிருப்பு சிவன்கோயில் மீது பாடப்பட்ட பாடல்களை ஒலிநாடா வடிவமாக்கினார்.

புதுக்குடியிருப்பு கிருஷ்ணன் ஆலயத்தின் மீது ஊஞ்சற்பாடலை இயற்றிப் பாடினார்.

2.
ஊடகம்

1971 முதல் 1988 வரை இலங்கை வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
திருமுறைப்பாடல்கள், பாமாலை, மெல்லிசைப்பாடல்கள், நாட்டுப் பாடல்கள், நாடகமேடைப்பாடல்கள் ஆகிய நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்.

3.
மெல்லிசை

கவிஞர் அக்கரை பாக்கியன் எழுதிய “அழகுநிலா வானத்திலே பவனிவரும் நேரத்திலே” என்ற மெல்லிசைப் பாடலைப் பாடினார். (இப்பாடலுக்கு இசையமைத்தவர் முத்துச்சாமி) இதுவே விவேகானந்தனை ஒரு மெல்லிசைப் பாடகராக இனங்காட்டியது.

நெறிப்படுத்திய நாடகங்கள்

அரிச்சந்திர மயானகாண்டம், காத்தவராயன், சிறீவள்ளி ,நந்தனார் , சத்தியவான் சாவித்திரி மற்றும் சிறுவர்களுக்காக குமணன், சோழநாட்டான் நீதிகேட்டான் ஆகிய நாடகங்களை நெறிப்படுத்தினார்.

பெற்ற கௌரவங்கள்

1988 இல் இவரது கலைச்சேவையைப் பாராட்டி அல்வாயூர் மக்களால் ‘நடிகநாதமணி’ என்ற கௌரமளித்துப் பாராட்டப்பட்டார்.

காத்தவராயன் சிந்துநடைக்கூத்து 1971 ஆம் ஆண்டு வானொலிக் கலைவிழாவில் அரங்கேற்றப்பட்டது.

1987 இல் இலங்கை ரூபவாகினியில் ஒளிபரப்பாகியது

1988இல் வானொலி பவளவிழாவின்போது இறுவெட்டாகியது.

*அரிச்சந்திரா,சிறீவள்ளி நாடகங்களும்வானொலியில் ஒலிபரப்பட்டன
பிரதேச மட்டங்களில் இடம்பெற்ற கலாசார நிகழ்வுகளிலும் போட்டிகளிலும் கலந்துகொண்டு பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

பதிவுகள்

சிறுவர் பாடல் வெளியீடு 22.06.2007,அல்வாயூர் கவிஞர் நாடக மன்றம்.

1973 இல் வெளியான வானொலி மஞ்சரியில் இவரைப் பற்றிய பதிவு

இலங்கை ரூபவாகினி கலையரங்கில் ஒளிபரப்பப்பட்டு ஆவணப்படுத்தப்பட்ட காத்தவராயன் சிந்துநடைக்கூத்து.

இலங்கை வானொலி 1974 இல் வெளியிட்ட மெல்லிசைப் பாடல் இறுவெட்டில் இவரது பங்களிப்பு

இலங்கை வானொலி பொன்விழா வெளியீடாகக் கொண்டு வந்த 10இறுவெட்டுக்களில் ஒன்றாக காத்தவராயன் சிந்துநடைக்கூத்து அமைந்திருந்தமை.

வெளியிணைப்பு

[[1]]ஈழத்து மெல்லிசைப் பாடல்கள் -ஒர் அவதானிப்பு-
[[2]]ஈழத்துக் கலைஞர்களின் பதிவுத்தொடர்
பகுப்புகள்: ஈழத்து நாடக நடிகர்கள் | 1943 பிறப்புகள் | 1999 இறப்புகள்

நந்தினி சேவியர்

விக்கிபீடியாவுக்காகத் தொகுத்தது 1தே. சேவியர் என்ற இயற்பெயர் கொண்ட நந்தினி சேவியர் (பி. மே 25, 1949) ஈழத்துப் படைப்பாளிகளில் ஒருவர். 1967 இல் இருந்து எழுதிவருகிறார். கவிதை, சிறுகதை, நாவல், பத்தி, விமர்சனக்கட்டுரை ஆகிய துறைகளில் தமது ஆளுமையைச் செலுத்தி வருகிறார்.


வாழ்க்கை வரலாறு

சேவியர் யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திருகோணமலையில் வசிக்கிறார். கலை இலக்கியத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்.

பாடசாலைக்கல்வியை மட்டுவில் கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலை, மட்டுவில் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை,சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி, வதிரி திருஇருதயக் கல்லூரி ஆகியவற்றில் கற்றார். பின்னர் யாழ் தொழில்நுட்பக் கல்லூரியிலும் பயின்றார்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (சீனச்சார்பு) வாலிப சங்க இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவர். இலக்கியச் செயற்பாடுகளுடன் சமூகச்செயற்பாடுகளிலும் முன்நின்று உழைத்தவர்.

இலக்கியப் பங்களிப்பு

சிறுகதைத்துறையிலேயே நன்கு அறியப்பட்டவர். நந்தினி சேவியர் என்ற பெயரிலேயே அதிகமும் எழுதிவருகிறார். இவருடைய பத்தி எழுத்துக்கள் மற்றும் கட்டுரைகள் சில வ.தேவசகாயம், தாவீது கிறிஸ்ரோ ஆகிய பெயர்களிலும் வெளிவந்துள்ளன.
நாவல்கள் குறுநாவல்கள் கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள் ஆகியவற்றை எழுதியிருந்தாலும் அவை இன்னமும் நூல்வடிவம் பெறவில்லை. இவரின் சிறுகதைகள் மாத்திரமே இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.

இவருடைய படைப்புக்கள் தாயகம், மல்லிகை, வாகை, அலை, புதுசு, இதயம், ஒளி,சிந்தாமணி, வீரகேசரி, தொழிலாளி, சுதந்திரன், ஈழமுரசு, ஈழநாடு ஆகிய சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன.
இலங்கை வடமாகாண கல்வி அமைச்சு கலை இலக்கியச் செயற்பாடுகளுக்கு இவர் செய்த பங்களிப்பு முக்கியமானது.

மேகங்கள், கடற்கரையில் தென்னை மரங்கள் நிற்கின்றன ஆகிய நாவல்களையும் ஒரு வயதுபோன மனிதரின் வாரிசுகள் என்ற குறுநாவலையும் எழுதியுள்ளார். ஆனால் அவை இன்னமும் பிரசுர வடிவம் பெறவில்லை.

ஆய்வரங்கு

தமிழ்நாட்டில் செப்ரெம்பர் 2000 இல் காலச்சுவடும் சரிநிகரும் இணைந்து நடாத்திய தமிழினி 2000 மாநாட்டில் கலந்து கொண்டு 'இருபதாம் நூற்றாண்டில் ஈழத்துத் தமிழ் மார்க்சிய இலக்கியம்' என்ற கட்டுரையை சமர்ப்பித்து உரை நிகழ்த்தினார்.

வெளிவந்த நூல்கள்

அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் (சிறுதைத்தொகுப்பு)பதிப்பு 1993, வெளியீடு - தேசிய கலை இலக்கியப் பேரவை
நெல்லிமரப் பள்ளிக்கூடம் (சிறுகதைத் தொகுப்பு) பதிப்பு 2011, வெளியீடு கொடகே.

நேர்காணல்கள்

'ஓடும்போது இருக்கும் சமத்துவம் உணவு பரிமாறிக் கொள்வதில் இல்லை' தலித் இதழ், நேர்கண்டவர்- ரவிக்குமார்.
'ரோம் நகரம் எரிய பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனாக எம்மால் இருக்கமுடியாது'. சுட்டும்விழி இதழ் - 2004
'எழுத்தாளர் நந்தினி சேவியருடன்' கலைமுகம் இதழ் - 15
'நந்தினி சேவியர் ஓர் இடைமறிப்பு' வி.கௌரிபாலன் (பிரசுரமாகாத நேர்காணல் _ஆதாரம் :-ஞானம், இதழ் - 114)

முக்கியமான கட்டுரைகள்

நந்தினி சேவியர் பற்றியது

"பேச்சுக்கும் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையே வித்தியாசமில்லாதவரான நந்தினி சேவியர்", கலாநிதி செ.யோகராசா, மல்லிகை அக்டோபர் 2007
அட்டைப்பட அதிதி, செல்லத்துரை சுதர்சன் எழுதியது, ஞானம் நவம்பர் 2009 இதழ் 114.
'நந்தினி சேவியர் கதைகள் கருத்தியல்களின் பதிவுகள்' -முஹ்சீன்
(உரை)எம்.ஏ நுஹ்மான் - 'அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்' சிறுகதைத்தொகுப்புப் பற்றி 1993 டிசம்பர் இலங்கை வானொலி தேசிய சேவை கலைக்கோலம் நிகழ்ச்சியில் ஆற்றிய உரை

நந்தினி சேவியர் எழுதிய கட்டுரைகள் சில

கடந்த நூற்றாண்டில் ஈழத்து மார்க்சிய இலக்கியம் (2000)
ஈழத்தின் இலக்கியத்தில் பரிசோதனை முயற்சிகள் (தினக்குரல் 2006)
புதுமைப்பித்தனை மீறிய கதை சொல்லும் இலாவகம் (தினக்குரல் 12.11.2006)
தெரிந்தும் தெரியாதவையும் (தினகரன் 2006)
எழுத்தாயுத வீரர்களும் திடசங்கற்பமும் (தினகரன் 2006)
இலக்கியச் சஞ்சிகைகளும் சர்ச்சைகளும் (வீரகேசரி 2006)

பெற்ற கெளரவங்கள்

ஈழநாடு பத்திரிகையின் 10வது ஆண்டு நிறைவையொட்டி அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட நாவல் போட்டியில் ‘மேகங்கள்’ என்ற நாவல் இரண்டாம் பரிசு பெற்றது.

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம் 50 வது ஆண்டு நிறைவையொட்டி நடத்திய நாவல் போட்டியில் ‘ஒரு வயதுபோன மனிதரின் வாரிசுகள்’ என்ற குறுநாவல் தங்கப் பதக்கத்தை முதற்பரிசாகப் பெற்றது.

1993 இல் வெளிவந்த சிறந்த சிறுகதைத்தொகுப்புக்கான முதற்பரிசை விபவி சுதந்திர இலக்கிய அமைப்பு 'அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்' என்ற நூலுக்கு வழங்கியது.

உள்ளுராட்சித் திணைக்களம் நடத்திய ‘தமிழின்பக் கண்காட்சி’ யில் 'அயல்கிராமத்தைச் சேர்ந்தவர்கள்' நூலுக்கு முதற்பரிசு வழங்கியது.

வெளியிணைப்பு

நந்தினி சேவியர் எதிர்நீச்சல்போடும் படைப்பாளி -லெனின் மதிவானம்
நூலகத்தில் - அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்

சிதறுண்ட காலக்கடிகாரம்


புதிய வரவு

சிதறுண்ட காலக்கடிகாரம்
(தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு)

ருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த அமரர் திருமதி தங்கம்மா சரவணை நினைவாக ஈழத்துக் கவிகள் 30 பேரின் கவிதைகள் அடங்கிய புதிய நூல் வெளிவந்துள்ளது.

இத்தொகுப்பை சித்தாந்தன் , சி.ரமேஷ், மருதம் கேதீஸ் ஆகியோர் தொகுத்திருக்கிறார்கள்.

தொகுப்பில் ந.சத்தியபாலன், பெண்ணியா, எஸ்போஸ், றஷ்மி, அபார், தானா விஷ்ணு, சித்தாந்தன், பஹீமா ஜஹான், ஒட்டமாவடி அறபாத், வினோதினி,நவாஸ் சௌபி, மைதிலி,அஜந்தகுமார், மருதம் கேதீஸ், கருணாகரன், அலறி, துவாரகன், மலரா, ரகுமான் ஏ.ஜமீல், பா.அகிலன், தீபச்செல்வன், அனார், கனக ரமேஷ், யாத்திரிகன், கோகுலராகவன், மலர்ச்செல்வன், முல்லை முஸ்ரிபா, ஆழியாள், ரிஷான் ஷெரிப் ஆகிய 30 கவிகளின் கவிதைகள் உள்ளன.

இத்தொகுப்புப் பற்றி தொகுப்பாசிரியர்கள் பின்வருமாறு எழுதியிருப்பது கவனத்திற்குரியது

“இரண்டாயிரமாம் ஆண்டுக்குப் பிறகு எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பாகவே இக்கவிதைத் தொகுப்பு வெளிவருகின்றது. இதில் பங்களித்துள்ள கவிஞர்கள் பலரும் தொண்ணூறுகளிலிருந்து அல்லது அதற்குப் பின்னரான காலப்பகுதியிலிருந்து எழுதி வருபவர்களாவர். இத்தொகுதியிலுள்ள கவிதைகளில் அநேகமானவை யுத்தத்தின் வலியை, அது ஏற்படுத்தியிருக்கின்ற வடுக்களையே பேசுகின்றன. இன்னும் மனித மனதுகளுக்குள் படர்ந்திருக்கும் மென் உணர்வுகளின் தடங்களையும் கனவுகள் ஏக்கங்களையும் பேசுகின்றன. யுத்தம் மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்திருக்கின்றது. மக்களை அலைவுறச் செய்திருக்கின்றது. கடந்த காலம் பற்றிய மீள் வாசிப்புக்கான எத்தன முயற்சியாகவே இத்தொகுப்பு தொகுக்கப்பட்டுள்ளது. இந்த மீள் வாசிப்பானது அனைத்து நிலைகளிலும் தொடரவேண்டும் என்பதே எமது விருப்பாகும். வலிகளில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளவும் நிலையான சமாதான வாழ்வுக்கும் இத்தகைய மீள்வாசிப்பு உறுதுணையாக அமையும் என நம்புகின்றோம்.”

உண்மையில் போருக்குப் பின்னரான ஈழத்துக் கவிகளின் தொகுப்புக்களின் வரிசையில் வைத்துப் பார்க்கவேண்டிய ஒரு தொகுப்பாக இது அமைந்துள்ளது. தொகுப்பின்போதான கால அவகாசமும் பக்க வரையறையும் இன்னுஞ்சில நல்ல கவிதைகள் தவிர்க்கப்பட காரணமாகிவிட்டன என்றும்; மற்றுமொரு சந்தர்ப்பத்தில் அதனைச் சாத்தியமாக்கலாம் என்ற எதிர்காலச் செயற்பாட்டையும் தொகுப்பாளர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள்.

இவ்வாறான நல்ல முயற்சிகள் தொடர வேண்டும்.

நூல் விபரம்
நூல் – சிதறுண்ட காலக்கடிகாரம்
முதற்பதிப்பு – 23.08.2011
தொகுப்பாளர் – சித்தாந்தன்
சி.ரமேஷ்
மருதம் கேதீஸ்
பதிப்புரிமை – தி.ஜீவரட்ணம்
தொடர்புக்கு – sroobanjeeva@ymail.com

பதிவு - சு.குணேஸ்வரன்