திங்கள், 24 ஜூன், 2013

"கெருடாவில் - ஊர்ப்பெயர் வரலாறு" - ஒரு குறிப்பு

கெருடாவில் மாயவர் ஆலயம்

- சு. குணேஸ்வரன்

            ‘கெருட + ஆவில் = கெருடாவில்’ என அமையும். ‘கெருடன்’ ‘கருடன்’ என்பன தமிழ் அகராதிப்படி ஒரே அர்த்தத்தைக் குறிப்பனவாகும்.     மேலும் நோக்கினால் ‘கெருடன்’ என்ற பறவையை விஷ்ணுவுக்குரியதாகக் கொள்வர். ‘ஆ’ என்பது பசு. ‘வில்’ என்பது வில் வளைவிலான குளம், அரைவட்டம், சிறுகுளம், ஆகியவற்றைக் குறிக்கும். அதாவது ‘சிறிய குளம்’ எனக் கருதலாம். ‘வில்’ என்ற கருவி எவ்வாறு அரைவட்டமாக வளைத்து எய்யப்படுகிறதோ அதேபோல அரைவட்ட வடிவ சிறிய நீர் நிலைகளைக் குறிப்பிட ‘வில்’ என்ற சொல் பயன்பாட்டில் இருந்துள்ளது. இவை பழந்தமிழ் இலக்கியங்கள்  ஊடாக நாம் அறியும் செய்திகளாகும். 

            கெருடாவில் பிரதேசம் குறிப்பாக ஆரம்பத்தில் ஈறள் காடுகளைக் (நெருக்கமாக இருந்த காடு) கொண்ட பிரதேசமாக அமைந்திருந்ததால் கருடன் என்ற பறவையினம் அதிகம் இருந்திருக்கலாம். (அதிகமான ஊர்ப்பெயர்கள் உயிரினங்களின் பெயர்களுடன் இணைத்து காரணப்பெயராக வழங்கப்பட்டிருக்கின்றன. உதாரணம் :- கெருடாவில் - (கெருடன்), கொக்குவில் - (கொக்கு), மந்துவில் - (மந்தி), நவிண்டில் (நண்டு) போன்ற ஊர்ப்பெயர்களை ஞாபகப்படுத்தலாம்.) அதேபோல் அங்கிருந்த நீர் நிலையின் காரணத்தால் ‘வில்’ என்பதும்  வந்திருக்கமுடியும் என்று கருதலாம்.

     மாயவர் கோவிலுக்கு அருகில் உள்ள கெருடாவில் அம்மன் கோவிலிலிருந்து கெருடாவில் பாடசாலைக்குச் செல்லும் கிழக்கு வீதியில் அமைந்துள்ள பிள்ளையார் கோவிலுக்கும் இடையில் தெற்குப்புறமாக முன்னர் ஒரு சிறிய குளம் இருந்ததாக மூதாதையர் குறிப்பிடுகின்றனர். அக்குளம் இருந்த இடம் ‘பால்மோட்டை’ என தொட்டில் கந்தசாமி கோவில் ஆலய பாலசுப்பிரமணியக் குருக்கள் குறிப்பிடுகிறார்.

    தற்காலத்தில் மழைபெய்தபின்னர் அதனை அண்டிய பிரதேசத்தில் நீர் நிரம்பியிருத்தலையும் கண்டுகொள்ளமுடியும். அதுமட்டுமல்லாமல் கோட்டைச்சீமா அம்மன் கோயிலின் கிழக்குப்புறத்தின் ஊடாகவும், கெருடாவில் மாயவர் கோவிலுக்கு தெற்குப்புறமாகவும், வடக்குத் தெற்கு பாடசாலை வீதிவழியாக வரும் நீரும் மழைக்காலத்தில் இவ்விடத்தில் தேங்குவதனை அவதானிக்கலாம். குளம் இருந்ததாகக் கருதப்படும் இடத்தில் இப்பொழுதும் கொண்டல் மரங்கள் காணப்படுகின்றன. 

            இப்பகுதிக்கு அருகில் பிராமண வகுப்பினர் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வாழ்விடத்திற்குரிய காணிகளின் பெயர்களை அல்லது தோம்புகளைத் தேடுவதன் ஊடாகவும் இவ்விடத்தில் இருந்த குளமும் அது தொடர்பான காரணப்பெயரும் மேலும் உறுதி செய்வதற்கு வாய்ப்பிருக்கும்.

            இந்தப் பிரதேச நிலவமைப்பை அடிப்படையாகக் கொண்டு மேலும் சில ஆதாரங்களை சுட்டிக்காட்டலாம். மயிலியதனை, என்பது ‘மயிலம்’ என்னும் மரத்தின் பெயரால் உருவானது. கேணித்தோட்டம் என்று இன்று வழங்கப்படும் பெயர் ‘நீர்நிலை’ மற்றும் ‘சிறு குளம்’ என அர்த்தப்படும்.  மற்றும் வயல் சார்ந்த மருதநிலத்தின் ஊர்ப்பெயர்களாக ‘வில்’, ‘பள்ளி’  ஆகியனவும் வழங்கப்படுகின்றன. அதனால்தான் பள்ளிவாசல் என்பது - பள்ளவாசல் என அழைக்கப்பட்டிருக்கலாம். (நீர் தேங்கக்கூடிய பள்ளமான நிலப்பிரதேசத்தைக் கொண்டதனாலும் இப்பெயர் வழங்கப்பட்டிருக்கலாம்), இதன் அடிப்படையிலேயே ‘வில்’ என்பதும் கெருடாவிலைப் பொறுத்தவரையில் சிறிய குளத்தைக் குறிப்பிடவே வழங்கங்கப்பட்டிருக்கிறது என்ற முடிவுக்கு வரமுடிகிறது.

(கெருடாவில் மாயவர் ஆலயத்தின் தோற்றத்திற்கு வித்திட்டவரும் ஆலய குருவாக விளங்கியவருமாகிய திரு க. செல்லன் (மாயவர் ஐயா) அவர்களின் மறைவின் 31 ஆம் நினைவு மலருக்கு எழுதப்பட்ட கட்டுரையில் இருந்து ஒரு பகுதி)