ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

ஆயிஷா நூல் அறிமுகம்


-சு. குணேஸ்வரன்

தமிழ்நாட்டு எழுத்தாளர் இரா நடராசனின் ஆயிஷா என்றொரு குறுநாவல் இலக்கிய உலகில் அண்மைக்காலங்களில் பேசப்பட்ட ஒரு படைப்பு. 1997 ஆம் ஆண்டு கணையாழியில் வெளிவந்த இந்தக் கதையை ஈழத்தில் அறிவமுது பதிப்பகத்தினர் மறுவெளியீடாகக் கொண்டு வந்திருந்தனர். அந்நூல் பற்றிய சில குறிப்புகள் ...

ஆக்க இலக்கியப் படைப்புக்களிலே விஞ்ஞானக் கதைகளை மையமாக வைத்து கதை கூறும் பாணி குறைவு. என்றாலும்; மிகக்குறுகிய 32 பக்கங்களிலே ஆழமான கருத்தை இந்தக் குறுநாவல் உணர்த்துகின்றது.

எதற்கும் துருவித்துருவிக் கேள்வி கேட்டு தமது ஐயத்தை தெளிவுபடுத்த விரும்பும் மாணவர்களை அடித்து இருத்தி ஆசிரியர் தான் சொல்வதையே எழுதுமாறு திணிக்கும் மனோபாவம் எமது கல்விமுறையில் இருந்து முற்றாக அற்றுப்போய் விட்டது எனக் கூறமுடியாது.

இன்றைய தனியார் கல்விக்கூடங்களில் இருந்து பாடசாலை, மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் வரை மாணவர்களின் சொந்தக் கருத்துக்களையோ, தேடல்களையோ, வரையறுத்து தேய்ந்துபோன ஒலித்தட்டுப்போல் ஆசிரியர் கூறுவதையே மீண்டும் மீண்டும் கேட்கும் நிலைக்கு மாணவர்கள் உள்ளனர். இந்த நிலையில் மாணவர்களிடம் இருந்து சீரிய சிந்தனைகளோ,அல்லது ஆயிஷா கேட்பதுபோல்;

“……கரோலின் ஏர்ஷர் போலவோ மேரி கியூரி போலவோ பெயர் சொல்லுகிற மாதிரி ஒரு பெண் கூட விஞ்ஞானியா வர முடியலையே ஏன்? ”

என்று கேட்கத் தூண்டுகிறது. இதற்கு ஒரு வகையில் இந்தக் கல்விமுறையினையும், அதற்குள் ஊறிப்போய் இன்னமும் தம்மை மாற்றிக் கொள்ளாத ஆசிரியர்களையும் இரா. நடராசன் குற்றம் சாட்டுகிறார்.

ஓர் ஆக்க இலக்கியத்திற்குரிய அத்தனை பண்புகளையும் இந்தக் குறுநாவல் கொண்டிராவிட்டாலும் ஆயிஷா முன்வைக்கும் கருத்து மிக முக்கியமானது. எமது சமூக வளர்ச்சியில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய நூல். குறிப்பாக ஆசிரியர்களும் எழுத்தாளர்களும்!

நூலாசிரியர் : இரா. நடராசன்
நூல் வெளியீடு : பாரதி புத்தகாலய்ம்
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை -600 018


-புதிய நூலகம் - செய்திமடல், 15.07.2011

2 கருத்துகள்:

  1. புத்தகம் வெளிவந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஒரு பத்திரிகை (உதயன் அல்லது நமது ஈழநாடு பத்திரிகையாக இருக்கவேண்டும்)இதை முழுவதுமாக வெளியிட்டிருந்தது. ஆசிரியர்களுக்கு நடைபெற்ற சேவைக்காலப் பயிற்சி வகுப்புக்களில் இப்புத்தகம் சிலாகிக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சியில் 'அறிவமுது புத்தகசாலை' இல் இருந்து 10 பிரதிகள் வரை நான் வாங்கிவந்து நண்பர்களுக்கு கொடுத்த ஞாபகம் உண்டு.

    பதிலளிநீக்கு