ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

மு. செ விவேகானந்தன்

விக்கிபீடியாவுக்காகத் தொகுத்தது -2


மு. செ விவேகானந்தன் (ஜனவரி 10, 1943- ஜூன் 7, 1999) ஈழத்துக் கலைஞர்களில் ஒருவர். கவிஞர், பாடகர், மெட்டமைப்பாளர், நடிகர், நெறியாளர் என அறியப்பட்டவர். 1988 ஆம் ஆண்டு இலங்கை ரூபவாகினியில் ஒலிபரப்பாகிய காத்தவராயன் சிந்துநடைக்கூத்தும் ‘அழகுநிலா வானத்திலே’ என்ற மெல்லிசைப் பாடலும் இவரை ஒரு சிறந்த கலைஞராக இன்றும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.


வாழ்க்கை வரலாறு

மு.செ விவேகானந்தன் இலங்கை யாழ்ப்பாணம் அல்வாய் பிறப்பிடமாகக் கொண்டவர். தந்தை மு. செல்லையா, தாய் நாகமுத்து. கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரியில் ஆரம்பக்கல்வியையும், யாழ் பரமேஸ்வராக் கல்லூரியில் இடைநிலைக்கல்வியையும் உயர்கல்வியையும் பெற்றார். தந்தையார் மு. செல்லையா மறைவினால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டிருந்த இசைப் பட்டப்படிப்பைத் தொடரமுடியாது இடைநிறுத்தினார்.

கலைப்பணி
1.
நாடகம்

பத்து வயதில் லோகிதாசனாக பாத்திரமேற்று நடித்ததில் இருந்து இவரது கலைவாழ்வு ஆரம்பமானது. கலைப்போதனாசிரியர் மு.பொன்னையா குருவாகவும் அண்ணாவியாராகவும் அமைந்தார்.

அரிச்சந்திரமயான காண்டம், காத்தவராயன், நந்தனார், சத்தியவான் சாவித்திரி, நக்கீரர், பூதத்தம்பி, அசுவத்தாமன் ஆகிய இசைநாடகங்களிலும்; சகோதர பாசம், இதயத்துக்கு இதயம், ஆகிய சமூக நாடகங்களிலும்; வேடன், கண்ணப்பர், மார்க்கண்டேயர் ,ஆகிய பாத்திரங்களேற்று புராண நாடகங்களிலும் நடித்துள்ளார். நடிகமணி வைரமுத்துவுடன் பூதத்தம்பியாகவும், பக்தநந்தனாரில் நந்தனாராகவும் நடித்தார்.

பிரதேச ஆலயங்களிலும் நிகழ்வுகளிலும் இசைக்கச்சேரிகள் நிகழ்த்தியுள்ளார்.
போர்க்காலச் சூழ்நிலையில் முல்லைத்தீவில் குடும்பத்துடன் இடம்பெயர்ந்து வாழ்ந்தபோதும் வன்னியிலும் தனது கலைப்பணியைத் தொடர்ந்துள்ளார். அங்கு புதுக்குடியிருப்பு சிவன்கோயில் மீது பாடப்பட்ட பாடல்களை ஒலிநாடா வடிவமாக்கினார்.

புதுக்குடியிருப்பு கிருஷ்ணன் ஆலயத்தின் மீது ஊஞ்சற்பாடலை இயற்றிப் பாடினார்.

2.
ஊடகம்

1971 முதல் 1988 வரை இலங்கை வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
திருமுறைப்பாடல்கள், பாமாலை, மெல்லிசைப்பாடல்கள், நாட்டுப் பாடல்கள், நாடகமேடைப்பாடல்கள் ஆகிய நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்.

3.
மெல்லிசை

கவிஞர் அக்கரை பாக்கியன் எழுதிய “அழகுநிலா வானத்திலே பவனிவரும் நேரத்திலே” என்ற மெல்லிசைப் பாடலைப் பாடினார். (இப்பாடலுக்கு இசையமைத்தவர் முத்துச்சாமி) இதுவே விவேகானந்தனை ஒரு மெல்லிசைப் பாடகராக இனங்காட்டியது.

நெறிப்படுத்திய நாடகங்கள்

அரிச்சந்திர மயானகாண்டம், காத்தவராயன், சிறீவள்ளி ,நந்தனார் , சத்தியவான் சாவித்திரி மற்றும் சிறுவர்களுக்காக குமணன், சோழநாட்டான் நீதிகேட்டான் ஆகிய நாடகங்களை நெறிப்படுத்தினார்.

பெற்ற கௌரவங்கள்

1988 இல் இவரது கலைச்சேவையைப் பாராட்டி அல்வாயூர் மக்களால் ‘நடிகநாதமணி’ என்ற கௌரமளித்துப் பாராட்டப்பட்டார்.

காத்தவராயன் சிந்துநடைக்கூத்து 1971 ஆம் ஆண்டு வானொலிக் கலைவிழாவில் அரங்கேற்றப்பட்டது.

1987 இல் இலங்கை ரூபவாகினியில் ஒளிபரப்பாகியது

1988இல் வானொலி பவளவிழாவின்போது இறுவெட்டாகியது.

*அரிச்சந்திரா,சிறீவள்ளி நாடகங்களும்வானொலியில் ஒலிபரப்பட்டன
பிரதேச மட்டங்களில் இடம்பெற்ற கலாசார நிகழ்வுகளிலும் போட்டிகளிலும் கலந்துகொண்டு பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

பதிவுகள்

சிறுவர் பாடல் வெளியீடு 22.06.2007,அல்வாயூர் கவிஞர் நாடக மன்றம்.

1973 இல் வெளியான வானொலி மஞ்சரியில் இவரைப் பற்றிய பதிவு

இலங்கை ரூபவாகினி கலையரங்கில் ஒளிபரப்பப்பட்டு ஆவணப்படுத்தப்பட்ட காத்தவராயன் சிந்துநடைக்கூத்து.

இலங்கை வானொலி 1974 இல் வெளியிட்ட மெல்லிசைப் பாடல் இறுவெட்டில் இவரது பங்களிப்பு

இலங்கை வானொலி பொன்விழா வெளியீடாகக் கொண்டு வந்த 10இறுவெட்டுக்களில் ஒன்றாக காத்தவராயன் சிந்துநடைக்கூத்து அமைந்திருந்தமை.

வெளியிணைப்பு

[[1]]ஈழத்து மெல்லிசைப் பாடல்கள் -ஒர் அவதானிப்பு-
[[2]]ஈழத்துக் கலைஞர்களின் பதிவுத்தொடர்
பகுப்புகள்: ஈழத்து நாடக நடிகர்கள் | 1943 பிறப்புகள் | 1999 இறப்புகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக